அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!! (படங்கள் வீடியோ)

யாழ் மாநகர சபையின் அடுத்த வரவு-செலவுத் திட்டத்தின் போது எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
இதன்போது அடுத்த வருடத்திற்கான மாநகரசபை பட்ஜெட்டின் போது எவ்வகையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் குறிப்பாக பூங்காக்கள் மைதானங்கள் பொதுச் சந்தைகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஊடக சந்திப்பு…..
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்படவேண்டியதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகிலுள்ள குளத்தின் வர்ணங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுடன் அதில் மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”