;
Athirady Tamil News

தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு EU வின் முயற்சிக்கு வலு சேர்க்கும்!!

0

எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது. அகத்திலும் புலத்திலும் இருக்கும் நம் இனத்தை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய இனமாக கட்டியமைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். எமது நீண்டகால குறுகிய கால இலக்குகளை ஒன்றோடு ஒன்று முரண்படுத்தி குழப்பிக் கொள்ளாமல், வரையறுத்து பயணிக்க காலம் பணித்துள்ளது என ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எமது இலக்குகளை கட்டம் கட்டமாகவும் நேர்த்தியாகவும் சென்றடைய வழிவகுக்கும். இதற்கு உதாரணமாக திகழும், பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழர் நலன் சார்பான ஒருமித்த செயல்பாட்டை முன்னெடுக்கும் தருணத்தில் தமிழர் தரப்பாகிய நாம் ஒருமித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிரவித்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு இலங்கை வர இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் தமிழர் தரப்போடும் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பிரேரணையை இலங்கை அரசு நிராகரித்திருந்தது. இதை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் அவதானத்தில் எடுத்திருந்தது. அதன் பிரதிபலிப்பாக கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை நீக்கும் வரைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதை தடைசெய்வதை பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது.

இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சியில் இதன் தாக்கத்தை நாடு அனுபவித்து இருந்தது. இதிலிருந்து மீளும் முகமாக இலங்கை அரசு ஐ.நாவின் பரிந்துரைகளை கருத்தில் கொள்வதாக குரல் கொடுக்கிறது.

சர்வதேச அழுத்தங்கள், ஐ.நா பிரேரணை என்பனவற்றிற்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாடு இலங்கையை இறுக்கமான பிடிக்குள் கொண்டுவந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் நீக்குவது என்பது பல்லாண்டு காலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் எமது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வழிவகுக்கும். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழர் தரப்பினர் தமது ஆதரவினை ஒருமித்த நிலைப்பாட்டில் விரைந்து செயலாற்றுவது எம்மினத்தின் அவசியமாக உள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வருகையிலாவது தமிழர் தரப்பு தமக்குள் இருக்கும் பல கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்த நிலைப்பாட்டில் எங்கள் ஆதரவை அவர்கள் முன்னெடுப்புக்கு தெரிவிப்பது காலத்தின் அவசியம்.

மேலும் நம் தாயகப் பரப்பில் எமது இனம் முகம் கொடுத்து நிற்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையாக காணி அபகரிப்பு, குடியேற்றம் மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களையும் ஒருமித்து ஐரோப்பிய பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த எமது முயற்சிக்கு ஒன்றிணையுமாறு அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறோம் எனவும் ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*