;
Athirady Tamil News

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடல்!! (படங்கள்)

0

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல் நிகழ்வும் இன்றைய தினம் (14.10.2021) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் 2021 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை இவ் ஆண்டு இறுதிக்குள் எவ்வாறு அடைந்து கொள்வது என்பது தொடர்பாகவும், 2020 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் தேசிய மட்ட அடைவு மட்டம் முதலாம் நிலையில் இருந்தமை தொடர்பாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதேச செயலகங்கள் தேசிய அடைவு மட்டத்தை அடைந்தமை தொடர்பாகவும் ஆராய்ந்ததுடன், அரசாங்க அதிபரினாலும், மேலதிக அரசாங்க அதிபரினாலும் சிறப்பு அடைவு மட்டத்தை அடைந்த உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட்டனர். அத்துடன், 2021 ஆம் ஆண்டும் பிரதேச செயலகங்களிற்கு வழங்கப்பட்ட அடைவு மட்டங்களை பூரணமாக அடைந்து கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் சமூக பாதுகாப்புச் சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், தேசிய ரீதியாக ஏழு தடவைகள் முன்னிலையில் திகழும் யாழ்.மாவட்டம் 2021 ஆம் ஆண்டிலும் நிதி மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சிறந்த நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் இந்நிலைமைக்கு வித்திட்ட விடயப்பரப்புடன் தொடர்புடைய பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும்
தனது பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன் தொடர்ந்தும் யாழ்.மாவட்டம் இந்நிலையை தக்கவைக்க அனைவரதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்பதாக குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் 2020 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்தைப் பெற்றமைக்கான மெச்சுரை இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கௌரவ தலைவர் சார்பாக சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு, கிழக்கு இணைப்பதிகாரியினால் அரசாங்க அதிபரிற்கு வழங்கியதுடன், அரசாங்க அதிபர் ஊடாக மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலக ரீதியில் தேசிய மட்டத்தைப் பெற்ற மருதங்கேணி பிரதேசசெயலர், பருத்தித்துறை பிரதேச செயலர் ஆகியோரிற்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் 2020 ஆம் ஆண்டிற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் 2021 ஆம் ஆண்டில் 100% அடைவு மட்டத்தை அடைந்த கரவெட்டி பிரதேச செயலர், தெல்லிப்பளை பிரதேச செயலர் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேசசெயலர் ஆகியோர் அரசாங்க அதிபரினால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்கள், சமூக பாதுகாப்புச் சபையின் வடக்கு, கிழக்கு இணைப்பதிகாரி, சமூக பாதுகாப்புச் சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − seven =

*