இந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளாவில் 135 சதவீதம் கூடுதல் மழை…!!

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த 4 மாதங்களில் தான் கேரளாவில் கூடுதல் மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
அதன்பின்பு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கிய பின்பு மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் அக்டோபர் முதல் வாரம் வரை 192.7 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது. அதன்பின்பு 453.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 135 சதவீதம் கூடுதல் மழை பொழிவாகும்.
மழை
மாநிலம் முழுவதும் திருச்சூர், ஆலப்புழா மாவட்டங்களை தவிர மீதமுள்ள 12 மாவட்டங்களிலும் 100 சதவீதம் அளவுக்கு மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 223 சதவீதமும், ஆலப்புழாவில் குறைந்தபட்சமாக 66 சதவீதமும் மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த மழை செப்டம்பர் மாதம் வரையே பெய்தது. அதன்பின்பு தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே பலத்த மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் கேரளாவில் கூடுதல் மழை பொழிவுக்கு ஒரு காரணமாகும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.