உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார் மோடி…!!!

பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். காலை 10.30 மணியளவில் சித்தார்த்நகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தின் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் 1.30 மணியளவில் வாரணாசியில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், வாரணாசியில் ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
‘பிரதமரின் ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா, நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டமாகும். பொது சுகாதார உள்கட்டமைப்பில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகள் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டம், கூடுதல் கவனம் செலுத்தப்படும் 10 மாநிலங்களில் உள்ள 17,788 கிராமப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவை வழங்கும். அனைத்து மாநிலங்களிலும் 11,024 நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்படும்’என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.