;
Athirady Tamil News

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் – ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா பொருளாதார தடை..!!

0

ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது.

அப்போது முதல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பக்கம் நிற்கின்றன. இதன் காரணமாக ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் ஒவ்வொரு முறையும் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.‌

இந்த சூழலில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஓமன் நாட்டின் மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘எம்.வி. மெர்சர் ஸ்ட்ரீட்’ என்கிற எண்ணெய் கப்பல் மீது ‘டிரோன்’ (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து மற்றும் ருமேனியாவை சேர்ந்த 2 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

ஈரானே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல், அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நேரடியாக குற்றம் சாட்டின. ஆனால் ஈரான் வழக்கம்போல இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி மறுத்துவிட்டது.

இந்தநிலையில் ‘எம்.வி. மெர்சர் ஸ்ட்ரீட்’ கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரான் ராணுவ டிரோன் பிரிவு கடந்த ஜூலை மாத இறுதியில் ‘எம்.வி. மெர்சர் ஸ்ட்ரீட்’ கப்பல் மீது தாக்குதல் நடத்தி 2 மாலுமிகளை கொன்றது. அதோடு கடந்த 2019-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியிலும் ஈரான் ராணுவ டிரோன் பிரிவு உள்ளது.

அது மட்டுமின்றி ஈரானின் டிரோன்கள் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகின்றன.

எனவே, ஈரான் ராணுவ டிரோன் பிரிவின் மீதும், அதற்கு தலைமை தாங்கி வரும் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாக பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நின்று போன நிலையில், அந்த பேச்சுவார்த்தையை நவம்பர் மாதம் மீண்டும் தொடங்க ஈரான் சம்மதம் தெரிவித்திருந்தது.

மேலும் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் புதிய பொருளாதார தடைகளை விதித்தது தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.