;
Athirady Tamil News

திருமணமான மறுநாள் தோழியுடன் இளம்பெண் ஓட்டம்- மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை…!!

0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் புதுமணத்தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது இளம்பெண் போன் செய்துவிட்டு வருவதாக கூறி, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வங்கிக்குள் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் வெளியே வந்து பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அவர் நீண்ட நேரம் மனைவிக்காக வங்கியிலேயே காத்திருந்தார். மாலை நேரமாகியும் மனைவி திரும்பிவரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதுப்பெண் மாயம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இளம்பெண்ணுக்கு ஒரு தோழி இருப்பதும், 2 பேரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றதும் தெரியவந்தது. அவர் செல்லும்போது வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார். திருமணமான மறுநாள் மனைவி தோழியுடன் ஓட்டம் பிடித்ததை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன கணவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாயமான புதுப்பெண், அவரது தோழி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையே புதுப்பெண்ணின் தோழியின் தந்தைக்கு மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய லாட்ஜ் நிர்வாகத்தினர், உங்கள் மகள் அடையாள அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து இருந்தார். அவருடன் மற்றொரு இளம்பெண்ணும் தங்கி இருந்தார். இருவரும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தோழியின் தந்தை போலீசாருடன் மதுரைக்கு சென்று அந்த லாட்ஜில் காத்திருந்தார். இந்த நிலையில் புதுப்பெண்ணும், தோழியும் மீண்டும் அந்த லாட்ஜ்க்கு வந்தனர். அங்கு புதுப்பெண்ணின் தோழி தனது தந்தையும், அவருடன் இருந்த போலீசாரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணை

விசாரணையில், தோழிகள் 2 பேரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் பணம் தேவைப்படும் என்பதால் திருமணம் வரை காத்திருந்துள்ளனர். திருமணம் முடிந்ததும் மறுநாள் கணவருடன் வங்கிக்கு சென்ற புதுப்பெண் தனது 16 பவுன் நகை மற்றும் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் தோழியை வரவழைத்து 2 பேரும் சேர்ந்து ஸ்கூட்டரில் திருச்சூருக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் ரெயில் நிலையம் அருகில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வாடகை காரில் ஜவுளி கடைக்கு சென்று 2 பேருக்கும் தேவையான புத்தாடைகளை வாங்கி உள்ளனர்.

அதன்பின்னர் வாடகை காருக்கு பணம் கொடுக்காமல் வேறு ஒரு வாடகை காரை பிடித்துக்கொண்டு கோட்டயம் சென்றுள்ளனர். அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மதுரைக்கு சென்று தோழியின் அடையாள அட்டையை காண்பித்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அதன்பிறகு மீண்டும் ரெயிலில் பாலக்காடு வந்துள்ளனர். அங்கிருந்து வாடகை காரில் திருச்சூர் சென்று ரெயில்நிலையத்தில் வைத்திருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மீண்டும் ரெயில் மூலம் மதுரைக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையேதான் வாடகையை செலுத்தாமல் லாட்ஜில் இருந்து வெளியே சென்ற இளம்பெண்கள் 3 நாட்களாக திரும்பி வராததால் அடையாள அட்டையில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு தோழியின் தந்தைக்கு லாட்ஜ் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் தங்களிடம் சிக்கிய புதுப்பெண்ணையும், அவரது தோழியையும் அழைத்து போலீசார் அறிவுரைகள் கூறினர். அதன்பின்னர் இருவரின் உறவினர்களையும் அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். புதுப்பெண்ணுடன் சென்ற தோழியும் திருமணமாகி 15 நாளில் கணவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.