;
Athirady Tamil News

2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை…!!

0

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அவர் மண்ணின் மகன் என்று உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மக்கள் அவரது பேச்சை நிராகரித்துவிட்டனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் 2 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.

அனைத்து மந்திரிகளும் அந்த தொகுதியில் தங்கி ஓட்டு சேகரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பா ஆட்சியில் நீடித்து இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு இவ்வாறு தான் வந்திருக்கும். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.

பா.ஜனதா எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு மற்றும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.

ஹனகல் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி டெபாசிட் இழந்துள்ளது. தேவேகவுடா 10 நாட்கள் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர். அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை நம்பவில்லை. அந்த கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.

மக்களின் பிரச்சினைகள்

இந்த மாத இறுதிக்குள் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவில்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அங்கு சுவா்ண சவுதா கட்டப்பட்டது. பிட்காயின் வழக்கில் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை முதல்-மந்திரி கூற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.