;
Athirady Tamil News

கேரளாவில் கனமழை நீடிப்பு – சுற்றுலா பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப் 2…!!!

0

கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு, மலப் புரம் மாவட்டங்களில் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொல்லம் தென்மலை பகுதியிலுள்ள காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தென்மலையில் இருந்து ரோசிமலை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் அந்த வழியாக சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. ஜீப்பில் ஒரு பெண் உள்பட 2 பயணிகள் இருந்தனர். அவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதைக்கண்ட உள்ளூர் மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் துணையுடன் அந்த ஜீப்பை கயிறு கட்டி இழுத்தனர். அதிர்ஷ்டவசமாக ஜீப்பில் இருந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை ஆரியங்காவு பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுபோல திருச்சூரில் ஆராட்டுபுழா ஆற்றிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். என்றாலும் வேகமாக வந்த வெள்ளம் சிறுவர்களை இழுத்துச் சென்றது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று வெள்ளம் இழுத்துச் சென்ற சிறுவர்களை தேடினர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இன்னொரு சிறுவனை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.