;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது பாதிப்பு!! (வீடியோ)

0

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் இன்று நடாத்திய விசேட ஊடக சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இன்று அதிகாலை வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய அறிக்கையின்படி இன்றும்கூட வட மாகாணத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது. அனேகமான வீதிகள்,வீடுகள்,பொது இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போதைய நிலையில் சேத விபரங்களை மதிப்பீடு செய்து வருகின்றோம். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றார்கள்.வெள்ள நிலைமை காரணமாக நாங்கள் இன்று காலையில் பாடசாலைகளை ஆளுநரின் அனுமதியுடன் மூடுவதற்கு தீர்மானித்திருந்தோம். நாளை பாடசாலைகள் நடைபெறுமா இல்லையா என்பதை இன்று மாலை அறிவிப்போம்.

வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.

எவ்வாறிருப்பினும் 105 குடும்பங்களைச் சேர்ந்த 339 நபர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்றவகையிலே தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் உட்பட ஏனைய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் செய்து வருகின்றனர்.

நீர் நிலைகள் பல நிரம்பியுள்ளதன் காரணமாக சிறுவர்களை மிகப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.கடந்த காலங்களில் இவ்வாறான நேரங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருந்தது. அவற்றை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெரியப்படுத்த பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபையினரை கேட்டிருக்கின்றோம்.

மேலும் இந்த வெள்ள நிலைமை தொடர்ந்து ஏற்படுமிடத்து சுகாதார நிலையை கவனத்தில் எடுத்து அதற்கான முன்னாயத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி சபையுடன் இணைந்து வெள்ள நிலைமையை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்.பொதுமக்கள் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவேண்டும்.

கடல் நீர்மட்டம் உயருவதன் காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. தொண்டமானாறு நாவற்குழியில் உள்ள தடுப்பணைகள்கள் திறந்து விடப்பட்டு நீர் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வடிகால்களை சுத்தப்படுத்தி நீர் வழிந்தோடத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிலைமை ஓரிரு நாட்களுக்கு தொடரலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை கடல் சீற்றம் கடும் காற்று காரணமாக கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.