;
Athirady Tamil News

அரசாங்க நிதி பற்றிய குழு வழங்கிய அனுமதி!!

0

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கூடியபோதே இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் பிரகாரம் அடுத்துவரும் ஆண்டிற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வேலை நிகழ்ச்சித் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வரம்பின் கீழ் வருகின்ற பொது நிறுவனங்களால் 2022ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு மேவுகை, செயலாற்றல் கணக்காய்வுகள், விசேட கணக்காய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் கணக்காய்வுகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட முன்னோக்கிய நிகழ்ச்சித்திட்டமாக இது காணப்படும்.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் தலைப்புக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களின் எண்ணிக்கை 2024 என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 121 (5) பிரிவின் கீழ் வரவுசெலவுத்திட்டமும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு முன்வைக்கப்பட்ட பின்னர் நான்கு நாட்களிற்குள், மொத்த மதிப்பிடப்பட்ட செலவினத்தையும் அரசிறையையும் கணக்கிடுவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்ட அரசிறை, நிதிசார் மற்றும் பொருளாதார ஊகங்களின்மீதான அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இவற்றை சமர்ப்பிப்பதன் தற்போதைய நிலைமைகள் குறித்து இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து ஆறு வாரங்களினுள், பணக் குறித்தொதுக்குகளை அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு இணங்கியொழுகவுள்ளதா என்பதை உள்ளடக்கிய மதிப்பீடுகளின் மீதான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் 4(1) ஆம் உப பிரிவு, பிரிவு 6 மற்றும் பிரிவு 16 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 20இன் மூலம் நிதி அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒருங்குவிதிகளும் இக்குழுவில் அனுமதிக்கப்பட்டன.

அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக, பாராளுமன்ற உறுப்பினர்களான இசுறு தொடங்கொட, அனுப பஸ்குவல் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டனர். நிதி அமைச்சு, திறைசேரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.