;
Athirady Tamil News

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு…!!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். மேலும் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

தொடர்ந்து, சன்னிதானத்தில் புதிய மேல்சாந்திகளாக பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பு நம்பூதிரி பதவி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு அரிவராசனம்பாடி நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இன்று முதல் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார்.

தினசரி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்சபூஜைக்கு பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.