;
Athirady Tamil News

மாவீரர் நாள் நிகழ்வு; முல்லைத்தீவில் 47 பேருக்கு தடையுத்தரவு!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்ரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று தற்போதைய அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஜயன்கன்குளம் ஆகிய 07 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸாரின் விண்ணப்பத்தின் அடிப்படையில், மேற்படி 47 பேருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.