;
Athirady Tamil News

கற்பழிப்பு குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்ய சட்டம்- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்…!!

0

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஒரு வருடத்திற்குப் பிறகு, பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமரால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது எதிர்ப்பு தெரிவித்தார். இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார். பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் கூறினார். எனினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.