;
Athirady Tamil News

எச்சரிக்கை – எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!!

0

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என தமிழக மீனவர்கள் உறுதி

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தடை செய்யப்பட்ட வலைகளளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடல் வளம் குறைந்து வருகிறது.

அதே போல் எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள்; இடையே பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இவ்வாறான பிரச்சைகளை தடுக்கும் வகையில் இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையினை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன், கடற்கரையிலிருந்து 5 நாட்டிகலுக்குள் கரையோரம் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்க தலைவர்கள மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்க மாட்டோம் எனவும், அப்படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகம் என்பதால் சேதமடைந்துள்ளது. இதனால் பேரிடர் காலங்களில்; மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தூண்டில் வளைவுகளுடன் கூடிய புதிய மீன் பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.