;
Athirady Tamil News

கள்ள வாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே எனக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு!! (படங்கள்)

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எதிராக ‘கள்ளவாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே’ எனக் கோசம் எழுப்பியவாறு வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினரை தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்களின் ஆதரவாளர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து இன்று (20.11) குறித்த கண்டண ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து ஊர்வலமாக பசார் வீதி ஊடாக பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் கொடும்பாவி மீதும் தாக்குதல் நடத்தி அதனை எரியூட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘கள்ள வாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே, வீண வாய் பேச்சு சிறிதரனே 20 வருடம் ஏமாற்றியது போதாதா, கள்ளவாக்கு போட்டதை ஒத்துக் கொண்ட சிறிதரனே கல்வி பற்றி பேசுகிறாயா, மறக்க வில்லை சிறிதரனே உன் பிரதேச வாத பேச்சை, கணனி துறையில் சாதித்த திலீபன் எம்.பியை தரக்குறைவாக பேசாதே, கள்ள வாக்கு நாயகனே உனக்கு என்ன தகுதி உண்டு திலீபன் எம்.பி பற்றி பேசுவதற்கு, சிறிதரனே அபிவிருத்தி உமக்கு மட்டும் ராஜபோக வாழ்க்கையா’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட இணைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.