;
Athirady Tamil News

வேளாண் திருத்த சட்டங்கள் கடந்து வந்த பாதை…!!

0

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தன. இதனால் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இந்தியாவையும் கடந்து சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாடகரும், சூழலியல் ஆர்வலருமான ரிகன்னா, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் உறவினரான வக்கீல் மீனா ஹாரிஸ் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு சர்வதேச அளவில் அறியப்பட்ட மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது முதல், அவை திரும்பப்பெறுவது குறித்து நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு வரை ஒரு பார்வை.

ஜூன் 5, 2020: வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பாக 3 அவசர சட்டம் பிறப்பிப்பு.

செப்டம்பர் 14: அவசர சட்டங்களுக்கு மாற்றாக 3 திருத்த சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகம்.

செப்டம்பர் 17: மக்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம்.

செப்டம்பர் 20: குரல் ஓட்டெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேறின.

செப்டம்பர் 24: வேளாண் திருத்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் 3 நாள் ரெயில் மறியல் அறிவிப்பு.

செப்டம்பர் 25: அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்.

செப்டம்பர் 26: வேளாண் திருத்த மசோதாக்களை எதிர்த்து, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் விலகல்.

செப்டம்பர் 27: வேளாண் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல். சட்டமாக அரசாணை வெளியீடு.

நவம்பர் 25: பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணிக்கு அழைப்பு; கொரோனா விதிமுறைகளை சுட்டிக்காட்டி டெல்லி போலீசார் அனுமதி மறுப்பு.

நவம்பர் 26: போலீசாரின் எதிர்ப்பை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி, அரியானா எல்லையில் போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்ட முயன்றதால் மோதல். டெல்லியை அடைந்தனர்.

நவம்பர் 28: டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா விருப்பம். ஆனால் விவசாயிகள் நிராகரிப்பு.

டிசம்பர் 3: விவசாயிகளுக்கும், மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை. எந்த முடிவும் இன்றி நிறைவடைந்தது.

டிசம்பர் 5: இரு தரப்பினருக்கு இடையே நடந்த 2-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி.

டிசம்பர் 8: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) விவசாயிகள் அழைப்பு, பிற மாநில விவசாயிகளும் ஆதரவு.

டிசம்பர் 9: 3 சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் நிராகரிப்பு. 3 சட்டங்களையும் திரும்பப்பெறுமாறு ஜனாதிபதியை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தல்.

டிசம்பர் 11: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

டிசம்பர் 30: விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம்.

ஜனவரி 4, 2021: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி.

ஜனவரி 11: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி.

ஜனவரி 12: 3 சட்டங்களுக்கும் தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக 4 நபர் குழுவையும் அமைத்தது.

டிராக்டர் அணிவகுப்பு

ஜனவரி 26: குடியரசு தினத்தில் செங்கோட்டை நோக்கி விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பில் வன்முறை வெடித்தது. ஒருவர் சாவு.

ஜனவரி 29: வேளாண் சட்டங்களை 1½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், இந்த சட்டங்களை மறுஆய்வு செய்ய கூட்டுக்குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு பரிந்துரை. ஆனால் இதை விவசாயிகள் நிராகரித்தனர்.

பிப்ரவரி 6: நாடு முழுவதும் விவசாயிகள் 3 மணி நேரம் சாலை மறியல்.

மார்ச் 6: விவசாயிகளின் டெல்லி போராட்டம் 100 நாட்களை நிறைவு செய்தது.

ஏப்ரல் 15: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு அரியானா துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதலா பிரதமர் மோடிக்கு கடிதம்.

மே 27: விவசாயிகளின போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்ததையொட்டி விவசாயிகள் கருப்பு தினம் அனுசரிப்பு.

ஜூலை 22: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, நாடாளுமன்றத்துக்கு அருகே விவசாயிகளும் கிசான் சன்சாத் என்ற பெயரில் ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ நடத்தினர்.

அக்டோபர் 22: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்கு இருந்தாலும், காலவரையின்றி சாலைகளை முடக்குவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து.

அக்டோபர் 29: காசிப்பூர், திக்ரி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் போடப்பட்டிருந்த தடைகளை போலீசார் அகற்றினர்.

நவம்பர் 19: நாடு முழுவதும் ஓராண்டுக்கு மேலாக சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 3 சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.