;
Athirady Tamil News

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு!!

0

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு வழங்கல் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட நோய் நிலமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அலகைப் பெற்றுக்கொண்டவர்கள் அத் தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக்குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் யாழ்ப்மாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

20 வயதிற்கு மேற்குறிப்பிட்டவர்களில் கீழ்வரும் நோய்நிலமை உடையவர்கள் மூன்றாவது அலகு தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்னுரிமை உடையவர்கள் ஆவர்.

நோய் நிலமையால் அல்லது அதற்கு பெற்றுக்கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்.
நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள்
உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல் மற்றும் சுவாசப்பை) மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள்,
புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள்,
மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய்நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள்,
மருத்துவரினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தமக்கருகிலுள்ள குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் இம்மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.