;
Athirady Tamil News

நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!! (வீடியோ)

0

யுத்தத்தில் இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றிலே முன்வைக்கப்பட வரவு செலவுத்திட்டம் என்றவகையிலே இம்முறையே விவசாயம்,நீர்ப்பாசனம்,கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அத்தனை பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுக்கும் இந்த நிதி சமமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு வட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது.

எங்களுக்கு உரிமை கிடைத்தால் போதும் அதன் பின்னர் எல்லாம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் வளர்ச்சி என்பது எல்லா வகையிலும் நமக்கு கிடைக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழரின் இருப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. திருகோணமலையில் ஒரு ஆசனம் தான் கிடைக்கின்றது இன்னும் சில வருடங்களில் அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

பேசிக்கொண்டும் வெற்று அறிக்கை வெளியிடுவது மட்டும் அரசியல் அல்ல. ஒரு சமூகத்துக்கு தேவையான அத்தனை துறையிலும் வளர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். தூரநோக்குடன் திட்டங்களை வகுக்க வேண்டும்.அடுத்த தலைமுறையாவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.

போராட்ட அரசியலை நாம் கொச்சைப்படுத்த மாட்டோம். அது உயர்ந்த நோக்கில் இடம்பெற்றது. அடுத்ததாக எதிர்ப்பு அரசியல்,நாங்கள் எதை செய்தாலும் எதிர்ப்போம் என்ற அரசியல் காணப்படுகிறது. அதனால் எதையும் சாதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரியான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. நான் உட்பட 16 பேர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நீண்ட காலத் தீர்வு விடயங்களிலும் நாம் சாதிக்கவில்லை. அபிவிருத்தி விடயங்களையும் நாம் பெற்றுக் கொடுக்கவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் நினைவேந்தல் தொடர்பாக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பொழுது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்,இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வீடுகளில் நினைவேந்தல்களை அனுஷ்டிக்க முடியும். அவர்களுக்கு நாங்கள் இந்த இடத்திலே ஆறுதலை சொல்ல விரும்புகிறேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.