;
Athirady Tamil News

குழந்தை பிறந்திருக்கா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்! (மருத்துவம்)

0

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் எனப்படும் நோய்தொற்று ஏற்படக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. எனவே தண்ணீர்கூடத் தரத் தேவை இல்லை. அவசியம் எனில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் தரலாம் அதுவும் எப்போதாவதுதான்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் எனில் தாய்ப்பாலை சுத்தமான எவர் சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடிபோட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். இதனைக் குழந்தைக்குத் தேவைப்படும்போது எடுத்துப் புகட்டலாம். ஃபிரிட்ஜில் வைத்த பாலைக் கொதிக்கவைக்கக் கூடாது. ஒரு மணி நேரம் வெளியேவைத்துக் குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த பாலை 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது பால் வழிந்து கழுத்து, தோள்பட்டை மேல் பட வாய்ப்பு உள்ளது. இதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டால் சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, குழந்தையின் உடலை, பால் குடித்து முடித்ததும் சுத்தமாகத் துடைக்க வேண்டும்

காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக் கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்கவைப்பதால், வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை ஃபீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், மூன்று வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமம். ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தினால் தரமான பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தவும். ஒவ்வொருமுறையும் அதனைப் பயன்படுத்திய பிறகும் வெந்நீரில் கழுவி உலரவைக்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். அதற்குப் பிறகு, துக்கம் படிப்படியாகக் குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரசாயனக் கொசுவர்த்திகள், கிரீம்கள், மேட்கள், லிக்யூவிட்கள் போன்றவற்றைவிட கொசுவலையே சிறந்தது. கொசு பேட் பயன்படுத்துவதும் நன்றே. குழந்தைக்குத் தூக்கம் கெடும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஏழாவது மாதத்தில் இருந்து திட உணவைக் கொடுக்கத் தொடங்கலாம். சிலர் செரிமானம் எளிதாக இருப்பதற்காக நன்கு குழைந்த மோர், தயிர் சாதம் மட்டும் கொடுப்பார்கள். இதனோடு, குழந்தைக்குப் பருப்பு சாதமும் கொடுக்க வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் பி, நார்சத்து ஆகியவை சேரும். ஒரு வயது நிறைவடையும் வரை பசும்பாலைத் தவிர்ப்பது நல்லது. இதனால், குழந்தையின் செரிமானத்திறன் மேம்படும்.

குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். மேலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது.

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி மசாஜ் செய்வது நல்லது. கண், மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் பி.ஹெச் லெவல் குறைவான சோப்புகள் அல்லது பயத்தம் பருப்பு போட்டு குளிக்க வைக்கலாம். தலைக்குக் குளித்ததும் தலையை நன்றாகத் துவட்ட வேண்டும்.
இல்லாவிட்டால் சளி பிடிக்கும்

குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்கள் எதுவும் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளின் சருமத்தில் வியர்வைத் துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.

பிறந்த குழந்தைகளுக்குக் கண்மை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் இன்று சந்தையில் கிடைக்கும் கண்மைகளில் பெரும்பாலானவற்றில் செயற்கையான பொருட்கள் நிறைந்துள்ளன என்பதால் அவற்றால் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பூசி போட வேண்டும். குழந்தை வளர்ந்து 16 வயதை நெருங்கும் வரை பல்வேறு வகையான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதால் சின்னம்மை, பெரியம்மை, ஹெபடைட்டிஸ் எனும் மஞ்சள் காமாலை, ரூபெல்லா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள், போலியோ போன்ற முடக்க நோய்கள் உட்பட பல்வேறு நோய்களை வென்று ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய காலத்தில் அந்தந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது.

பால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேவையான நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது பழரசமோ அல்லது சூப்போ அது உங்கள் விருப்பம். அதிக எண்ணெய், அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் நிறைய பேர் குழந்தையைப் பார்க்க வருவார்கள். அதனால் பெற்றோருக்கு குழந்தை உடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் குழந்தையுடன் நேரம் ஒதுக்கி அதனுடைய கண்களைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்தால் அது பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் வயிற்றில் இருக்கும் போதில் இருந்தே அது தாயின் குரலை கேட்டு பழகி இருப்பதால், சீக்கிரத்தில் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும்.

தூக்கத்தில் பசிக்கும்போது பால் குடிக்கவும் எளிதாக இருக்கும் அத்துடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவு
நெருக்கமும் கூடாது.

குழந்தையை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல வேண்டி இருந்தால் க்ளைடர், பேபி ராக்கிங் சேர் அல்லது குஷி சேர் எடுத்துச் செல்லலாம். குழந்தையின் முதுகுப்புறத்திற்கு சப்போர்ட் கொடுக்க சில மிருதுவான சிறிய அளவிலான தலையணைகளையும் எடுத்துச் செல்லலாம். உங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தின்பண்டங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகள் சிறந்தவை. வெளியே செல்லும் நேரங்களில் குழந்தைக்கு ஆடம்பரமான ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் கம்ஃபோர்ட் (வசதி) என்பது முக்கியமில்லையா? குளிரினாலோ, வெப்பத்தால் புழுங்கினாலோ எதையும் குழந்தையால் வாய்விட்டு சொல்ல முடியாது. பல அடுக்கு துணிகளை அணிவிக்கும்போது உடல் வியர்த்து குளிர்ந்து போகலாம்.

ஜிகு ஜிகு என ஆடம்பரமான ஆடை அணிவித்துச் செல்லும் போது கசகசவென, சில ஆடைகள் உறுத்தலாக இருக்கலாம். குழந்தையை வெளியே தூக்கிச் செல்லும் நேரங்களில் ஆடம்பரமான ஆடை அணிவிக்க வேண்டியதில்லை. குழந்தையின் வசதியும், ஆரோக்கியமுமே முக்கியம்!

குழந்தைகள், அசைதலை அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். அல்லது நல்ல துணியில் அதன் பிஞ்சு கைகளும் உள்ளடங்கும் படி சுற்றி பெற்றோர் தம் கைகளில் வைத்து ஆட்டலாம். இந்த ஒரே மாதிரியான அசைவினால் குழந்தைகள் மெல்ல மெல்ல உறங்கும்

குழந்தை தூங்காமல் அழுதுகொண்டு இருந்தால் குழந்தைக்கு ஏதாவது உடல்நலமில்லையா என பரிசோதிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நம்மைப் போல் சொல்லவா தெரியும்? எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா? பூச்சிக்கடி ஏதாவது இருக்கிறதா? சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்படுகிறதா? இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா? என்பதை எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பிஞ்சு குழந்தைகளின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பராமரிக்க வேண்டும்.

வசம்புக்கயிறை குழந்தைகள் கையில் கட்டிவிடுவதைத் தவிக்க வேண்டும். இதனை, குழந்தை வாயில் வைக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்கவைப்பதால், மருத்துவரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாளுக்கு 2200 லிருந்து 2400 கலோரி வரை உட்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொண்டாலும் பால் கொடுப்பதால் மாதத்திற்கு 4 பவுண்டு அளவிற்கு கூட தாய்மார்களுக்கு எடை குறைப்பு நிகழும்.

குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய டாஸ்க் என்பது இரவில் தூங்காமல் அழும் குழந்தையை சமாளிப்பதுதான். ‘கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்… அடங்காத பிள்ளை அழுகைக்கு அஞ்சும்’ என்ற பாடல் நூறு சதவிகிதம் உண்மை என்பது இரவில் குழந்தை தூங்காமல் அழும்போது புரியும். இரவில் தூங்கும்போது குழந்தையைத் தாய் தன் அருகில் படுக்க வைக்க வேண்டும். தாயின் அரவணைப்பு, தாயின் உடல் சூடு போன்றவை இதமான சூழலை கொடுப்பதால் பாதுகாப்பான மனநிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கும்.

அதன் ஸ்ட்ரெஸ் லெவலும் கட்டுக்குள் இருக்கும்.
இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அதற்கு முன் சில தினசரி செயல்பாடுகளை ஒரே வரிசையில் செய்ய வேண்டும். அதுதான் குழந்தைக்கு பழகும். அதாவது இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது, பாலூட்டுவது, தாலாட்டு பாடுவது என ஒரு குறிப்பிட்ட வரிசையில் இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்யும்போது அது பழகி குழந்தை அந்த நேரத்தில் தினமும் தூங்க ஆரம்பிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.