;
Athirady Tamil News

அரச நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும்!!

0

சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

இதுவரை நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பில் அனைத்து அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்கள் இதன்போது நோக்கத்தை தெளிவுபடுத்தியதுடன், அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா இதுவரையான முன்னேற்றத்தின் சுருக்கத்தை முன்வைத்தார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபை, வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், கட்டிடப் பொருட்கள் திணைக்களம், அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம், நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம், தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திர அமைப்பு மற்றும் ஓஷன்விவ் அபிவிருத்தி தனியார் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் அந்தந்த நிறுவனத் தலைவர்கள் பிரதமருக்கு விளக்கினர்.

பாதி கட்டி முடிக்கப்பட்ட 72000 வீடுகளில் மேலும் கட்டி முடிக்கப்பட வேண்டிய 40723 வீடுகளுக்காக ஆண்டுதோறும் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்ளல்,

மாதுலுவாவே சோபித தேரர் கிராமத்தில் எஞ்சிய 31 வீடுகள் மற்றும் அத்தியவசிய பணிகளை நிறைவுசெய்வதற்கு 112 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பெறல் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து நிவாரணம் பெறுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சவாலான காலங்களில் பணிகளை இடைநிறுத்த இடமளிக்கக் கூடாது எனத் தெரிவித்த கௌரவ பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் தேவையான முடிவுகளை துரிதப்படுத்தி உரிய பணிகளை சட்டப்படி முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

´நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து நிறுவனங்களின் ஆதரவைப் வழங்குவது அவசியமாகும். சந்தையில் டைல்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அரச நிறுவனங்கள் செயற்பட்ட விதத்திலேயே சீமெந்து மற்றும் கம்பிகளை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் கட்டுமானத்திற்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். சரியான தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கையால் நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்ட அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளமையும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.

அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருள் விநியோகம் காரணமாக நட்டத்தில் இயங்கிய கட்டிடப் பொடள்கள் கூட்டுத்தாபனம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் இன்று இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமையால் திறைசேரியின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த பல நிறுவனங்கள், தற்போது திறைசேரிக்கு சுமையாக அன்றி இலாபம் ஈட்டி வருவதாக நிறுவனத் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.