;
Athirady Tamil News

சவக்கிடங்கிலேயே 15 மாதங்களாக கிடந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள்..!!

0

கொரோனா முதல் மற்றும் 2-வது அலை பாதிப்பின்போது பெங்களூரு நகரில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி நிர்வாகமே மின்மயானத்தில் தகனம் செய்தது.

கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை சில குடும்பத்தினர் கேட்டும் கொடுக்கப்படவில்லை. சிலர் கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடல்களை பெற கூட செல்லாத நிலையை கொரோனா அரக்கன் ஏற்படுத்திவிட்டான்.

இந்த நிலையில் பெங்களூரு ராஜாஜிநகர் 1-வது பிளாக்கில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் 2 சவக்கிடங்குகள் உள்ளன. இதில் புதியதாக அமைத்த ஒரு சவக்கிடங்கு அடங்கும். கொரோனா பரவல் காரணமாக அங்குள்ள பழைய சவக்கிடங்கு கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மூடப்பட்டது.

இந்த நிலையில் 15 மாதங்களுக்கு பிறகு நேற்று அந்த சவக்கிடங்கை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து பலியான ஆண்கள் 2 பேரின் உடல்கள் அங்கே அழுகிய நிலையில் கிடந்தன. மேலும் பயங்கர துர்நாற்றமும் வீசியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த நோயாளிகளும், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொரோனா பாதிப்பின்போது இறந்தவர்களின் உடல்கள் பழைய சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான உடல்கள் அகற்றப்பட்ட நிலையில் இந்த சவக்கிடங்கு மூடப்பட்டது. பின்னர், இறந்தவர்களின் உடல்கள் புதிதாக கட்டப்பட்ட சவக்கிடங்கில் வைக்கப்பட்டன. இதனால், பழைய சவக்கிடங்கு மூடிக்கிடந்தது. தற்போது பழைய சவக்கிடங்கை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் அதில் உள்ள பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டடோது 15 மாதங்களுக்கு முன் கொரோனாவால் இறந்த இரு ஆண் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

15 மாதங்களாக வைக்கப்பட்டிருந்த உடல்கள் கண்டறியப்பட்ட பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரின் விவரங்கள் பற்றியும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் யாரும் உடல்களை பெற வரவில்லை. இதைத்தொடர்ந்து போலீசாரே, 2 உடல்களையும் மீட்டு அடக்கம் செய்தனர்.

கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடல்களை சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்காமலும், அல்லது அதனை அகற்றாமலும் 15 மாதங்களாக சவக்கிடங்கில் வைத்திருந்த ராஜாஜிநகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் மெத்தனப்போக்கிற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.