;
Athirady Tamil News

வவுனியாவில் 200 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது!! (படங்கள்)

0

வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்டிருந்த இளைஞரை (கணவன்) நேற்று (29.11) வவுனியா பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன் கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தாங்கி விட்டு மனைவியை கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார். இது தொர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம் , வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும தனது மனைவியை இதுவரை பொலிசார் மீட்டுத் தரவில்லை எனவும் பொலிசார் பக்கச் சார்பாகவும் அசமந்தமாகவும் செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த இளைஞன் கடந்த (27.10.2021) வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூன்று மணிநேர போராட்டத்தினையடுத்து பொலிசாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கு தொலைதொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை கீழே இறக்கினர்.

இந்நிலையில் தொலைத்தொடர்பு கோபுர அதி உயர் வலையத்தினுள் சென்றமை , தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி அதனை சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இளைஞன் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நேற்றையதினம் (29.11.2021) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.