;
Athirady Tamil News

அமெரிக்காவில் பரவிய ஒமிக்ரோன்…!!

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் இதுபோன்ற உருமாறிய வைரஸ்களே பெரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனாவை எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்துவிட்டன.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா குறித்து அதிக தகவல்கள் ஆய்வாளர்களிடம் இல்லை. இது புதிய உருமாறிய கொரோனா என்பதால் சர்வதேச அளவில் ஆய்வுகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஒமிக்ரோன் கொரோனா தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும், வெறும் சில நாட்களில் இந்த ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு 10 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளைஞர் ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் கடந்த நவ. 22 ஆம் திகதி அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார். அவருக்குக் கடந்த நவ. 29 ஆம் திகதி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து அவருக்கு என்ன மாதிரியான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய, அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தான் அவருக்கு ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், அந்த நபர் முழுமையாக 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டவர் என்றும் அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெள்ளி மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அந்த நபர் ஏற்கனவே தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு அவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. ஒமிக்ரோன் உறுதி செய்யப்பட்டுள்ள நபருக்குத் தீவிர பாதிப்பு இல்லை. லேசான அறிகுறிகள் மட்டும் உள்ளது. அதல் இருந்தும் கூட அவர் வேகமாகக் குணமடைந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தலைவர் ஆண்டனி பவுசி கூறுகையில், “இந்த ஒமிக்ரோன் கொரோனா மிக வேகமாகப் பரவக்கூடும் என்றே தோன்றுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை வேகமாக வேக்சின்களை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தடுப்பூசி எந்தளவுக்கு நமக்குத் தேவை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இந்த வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. நிச்சயம் நாம் நாட்டிற்கும் (அமெரிக்கா) வரும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைச் சமாளிக்க நாம் தயாராக உள்ளோமா என்பதே இப்போது நம்முன் இருக்கும் கேள்வி” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரோன் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் அதிகப்படியான மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பும் இந்த ஒமிக்ரோன் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.