;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.!!

0

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாகாணத் தொற்றாளர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், நேற்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒரு வார காலப் பகுதியை யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மட்ட கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை நடத்தப்பட்டு, டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் பாடசாலைகள், பொதுஇடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் அரச தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள், பொது இடங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிக்க வேண்டும்.

மாகாணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் பரவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

வடமாகாணத்தில் 238 பேர் இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றில் யாழ்ப்பாணத்தில் 147 பேரும் மன்னாரில் 25 பேரும் கிளிநொச்சியில் 25 பேரும் முல்லைத்தீவில் 36 பேரும் வவுனியாவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், டெங்கு சம்பந்தமாக இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.