;
Athirady Tamil News

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்…!!

0

தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இதில், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலியாகி உள்ளனர்.

எதிர்பாராமல் நிகழ்ந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த இந்திய அளவிலான பிரபலங்களின் பட்டியல் இதோ:

சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ்

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் சுபாஷ் சந்திர போஸ். 1945 ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவான் நாட்டில் பயணம் மேற்கொண்ட சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து விட்டதாக நம்பப்படுகிறது.

மோகன் குமாரமங்கலம்

1973 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி மக்களவை உறுப்பினர் மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.

என்.வி.என்.சோமு

1997ம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் திமுகவை சேர்ந்த அப்போதைய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் என்.வி.என்.சோமு உயிரிழந்தார்.

சஞ்சய் காந்தி

சஞ்சய் காந்தி

1980-ம் ஆண்டு டெல்லியில் நடந்த பயிற்சி விமான விபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய், குட்டி விமானத்தின் மூலம் சாகசம் செய்வதில் ஆர்வமுடையவர். டெல்லி விமான பயிற்சி நிறுவனத்தின் விமானம் ஒன்றை அவர் இயக்கிய போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது.

மாதவராவ் சிந்தியா

மாதவ ராவ் சிந்தியா

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாதவ ராவ் சிந்தியா உயிரிழந்தார். அக்கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக வலம் வந்த மாதவராவ் சிந்தியா ஒன்பது முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜிஎம்சி பாலயோகி

2002-ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கைகளூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாராளுமன்ற மக்களவையின் அவைத் தலைவர் பாலயோகி உயிரிழந்தார்.

சவுந்தர்யா

நடிகை சௌந்தர்யா

2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூரு அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல நடிகை சௌந்தர்யா காலமானார். தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த சௌந்தர்யா, பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கிளம்பிச் சென்றார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் அவர் உயிரிழந்தார்.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

2009-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்தார். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகே அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.