;
Athirady Tamil News

புருண்டி சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் உடல் கருகி சாவு…!!

0

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிடேகா மாகாணத்தின் தலைநகர் கிடேகாவில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. சுமார் 400 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 1,500-க்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பியர் நுகுருஞ்ஜிசாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இந்த சிறைச்சாலையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன கைதிகள் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

சிறைக்காவலர்கள் சிறையில் இருந்த தீயணைப்பு சாதனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி கைதிகள் 38 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 69 கைதிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் 34 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்காலம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் துணை அதிபர் புரோஸ்பர் பஸோம்பன்சா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.