;
Athirady Tamil News

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கை!!

0

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை 2016ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத்தொற்று பரவவில்லை. எனினும் கடந்த ஆண்டுகளில் இந்தியா போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியாத்தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற நாடுகளுக்கு செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

எனவே சபரிமலை செல்ல இருக்கும் யாத்திரிகர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம், அருகில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம், பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொ.பே.இல 021-2227924) தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

யாத்திரை நிறைவுற்றதில் இருந்து ஒரு வருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தங்கள் யாத்திரை தொடர்பான விவரங்களை மருத்துவரிடம் வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.