;
Athirady Tamil News

பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த உரிமையாளர்…!!

0

ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்ததை தடுக்க முடியாமல் போய்விட்டது.

பின்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த தூமஸ் கடைனென் என்பவர், 2013 ஆம் ஆண்டு வெள்ளை நிற ‘டெஸ்லா மாடல் எஸ்’ வகை காரை வாங்கி உள்ளார். இவரது கார் ரிப்பேர் ஆன நிலையில், பேட்டரி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் ஆகும் என மெக்கானிக் கூறியதால், இவ்வளவு செலவு செய்வதற்கு, காரை உடைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, காரை 30 கிலோ வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளார்.

கார் உரிமையாளர்

ஒரு யூடியூப் சேனலின் குழுவினர் இதை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் கார் உரிமையாளர் தூமஸ் கடைனென் பேசியதாவது:-

டெஸ்லா கார் சிறந்த கார். முதல் 1,500 கி.மீ. தூரத்திற்கு நன்றாக இருந்தது. அதன்பின்னர் ரிப்பேர் ஆகத் தொடங்கியது. ஒரு நாள் கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. இதனால் இழுவை வாகனம் மூலம், காரை வாங்கிய டீலரின் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்தது. பின்னர் ஒரு நாள் அங்கிருந்து எனக்கு போன் வந்தது. காரை ரிப்பேர் செய்ய முடியாது, முழு பேட்டரியையும் மாற்றினால்தான் காரை இயக்க முடியும் என்று மெக்கானிக் கூறினார். அதற்கு 20000 யூரோஸ் (இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய்) செலவாகும் என்றும் தெரிவித்தார்.

அப்போது, நான் எனது காரை எடுக்க வருகிறேன் என்று சொன்னேன். அத்துடன், காருக்கான கியாரண்டி உள்ளிட்ட எதுவும் இல்லாததால், முழு காரையும் வெடிக்கச் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டேன். இதையடுத்து காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு வந்தேன். இவ்வாறு அவர் பேசுகிறார்.

காருக்குள் வைக்கப்பட்ட எலான் மஸ்க் உருவ பொம்மை

தூமஸ் கடைனென் பேசி முடித்ததும், காரை சுற்றி 30 கிலோ அளவிற்கு வெடிப் பொருட்கள் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த வழியாக பறந்து வந்த ஒரு ஹெலிகாப்டர், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் உருவபொம்மையை கீழே போட்டது. எலான் மஸ்க் ஹெல்மெட் அணிந்தபடி அந்த உருவ பொம்மை இருந்தது. அதை டெஸ்லா காரின் டிரைவர் சீட்டில் வைத்தனர். அதன்பின்னர், காரை வெடிக்கச் செய்தனர். கார் வெடித்து சிதறும் காட்சியை பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“இனி எதுவும் இல்லை. நான் டெஸ்லா காரை ஓட்டும்போதுகூட இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததில்லை. மேலும், டெஸ்லாவை வெடிவைத்து தகர்த்த உலகின் முதல் நபர் நானாக இருக்கலாம். இது வரலாற்றில் இடம்பெறும்” என்கிறார் தூமஸ் கடைனென்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.