;
Athirady Tamil News

வடக்கு பிரதேச சபையை கூட்டமைப்பு இழந்தது !!

0

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன், புதிய தவிசாளாரக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், சபையில் சர்ப்பிக்கப்பட்டு, அநேக உறுப்பினர்களின் எதிர்ப்பால் இரு தடவைகள் தோல்வியடைந்திருந்தது.

இதையடுத்து, உள்ளுராட்சி சட்டங்களின் பிரகாரம், புதிய தவிசாளரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

குறித்த தேர்தல், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில், வடக்கு பிரதேச சபையின் காலாசார மண்டபத்தில், இன்று(22) நடைபெற்றது.

இதன்போது, சபையின் 26 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். பொதுஜன பெரமுனவின் ஓர் உறுப்பினர் சுகவீனம் காரணமாக சபைக்கு வருகைதரவில்லை.

இதன்போது, சபையின் புதிய தவிசாளர் ஒருவரை தெரிவுசெய்யுமாறு உள்ளுராட்சி ஆணையாளரால் கோரப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சோ.சத்தியேந்திரன் மற்றும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இருவர் பரிந்துரைசெய்யப்பட்டமையால் தவிசாளர் தெரிவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பை பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வதா என்று ஆணையாளர் கோரியிருந்தார்.

இந்நிலையில் 12 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்புக்கும் 13 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறும் இணக்கம் தெரிவித்தனர்.

குறிப்பாக உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக போட்டியிட்ட பெண் உறுப்பினர் ஒருவரும் இரகசிய வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

இதனையடுத்து, இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தவிசாரளர்களாக பரிந்துரைசெய்யப்பட்ட இருவருக்கும் தலா 12 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. ஒரு வாக்கு எவருக்கும் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரை தேர்வுசெய்வதாக ஆணையாளர் அறிவித்தார்.
இதனையடுத்து, சபை முன்னிலையில் இருவரது பெயரும் திருவுளச்சீட்டில் எழுதப்பட்டு தெரிவுசெய்யப்பட்டது. அதன் மூலம் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த த.பார்தீபன் தவிசாளராக தேர்வுசெய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.