;
Athirady Tamil News

நீட் தேர்வில் வென்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியாததால் மாணவி தற்கொலை…!!!

0

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி நாகூர் மாலா.

இந்த தம்பதியினரின் மகள் துளசி(வயது 18) இவர் கடந்த 2020-ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2-வில் 600-க்கு 421 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு தனியாக நீட் தேர்வு எழுதினார். இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான போதுமான கட்-ஆப் மதிப்பெண்கள் அவரால் பெற முடியவில்லை இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு(2021) திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

தற்போது நடந்து முடிந்த நீட் தேர்விலும் அரசு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான போதுமான கட்-ஆப் மதிப்பெண்களை அவரால் பெற முடியவில்லை. இதனால் துளசி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வெள்ளைச்சாமியும், நாகூர் மாலாவும் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்களது ஓட்டு வீட்டின் உத்திரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் துளசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய துளசியின் பெற்றோர், தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தங்கள் மகளின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பேராவூரணி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.