;
Athirady Tamil News

ஓ பாப்பா லாலி!! (மருத்துவம்)

0

குழந்தைகள் உடல் பருமனை மருத்துவ உலகில் இப்படித்தான் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். கொள்ளை நோய் என்ற அர்த்தம் தரும் இந்த வார்த்தையின் மூலம் குழந்தைகளின் பருமன் எத்தனை பெரிய பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

Global alliance for improved Nutrition என்ற ஆய்வு உலகளவில் அதிக பருமன் கொண்ட குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், இந்தியாவின் நகர்புறப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் Abdominal obesity பிரச்னை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது. குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லா பெற்றோருக்குமே இருக்கிறது.

ஆனால், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எத்தனை பெற்றோருக்கு இருக்கிறது? இது விவாதத்துக்குரிய கேள்விதான். இரைப்பை குடலியல் மற்றும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை நிபுணரான தீபக் சுப்ரமணியனிடம் இதுபற்றிப் பேசினோம்.

‘‘குழந்தைகளின் பருமனுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சத்துகள் அற்ற – ஆனால், அதிக சக்தி உள்ள உணவுகளையே குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். Empty calories என்கிற இந்த உணவுகளில் இருந்து கிடைக்கும் சக்திக்கேற்ற உடல்ரீதியான செயல்பாடுகளும் இருப்பதில்லை. விளையாட்டு என்பது மொபைல் கேம்ஸாகவோ, வீடியோ கேம்ஸாகவோ மட்டுமே இருக்கிறது.

இல்லாவிட்டால் தொலைக்காட்சியுடன் பொழுதைக் கழிக்கிறார்கள். இதுபோன்ற தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையாலேயே பருமன் ஏற்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய், எலும்பு தொடர்பான கோளாறுகள் உருவாகும் சாத்தியம் அதிகம். நடுத்தர வயதுகளில் வருகிற நோய்கள் இளவயதிலேயே வரவும் சாத்தியம் உண்டு. இதனுடன் மனதளவிலும் ஒருவரை பாதிப்பதாக இருக்கிறது பருமன். குண்டாக இருப்பதாக உணர்கிற பலருக்கு சுய மதிப்பு குறைந்து தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.

கொழு கொழுவென்று குழந்தைகள் இருப்பது ஆரோக்கியமானது என்பது தவறான நம்பிக்கை. குழந்தைகள் பருமனோடு இருப்பதாக சந்தேகப்பட்டால் முதலில் நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான பிரச்னை இல்லை என்பது உறுதியானால், அது சாதாரண பருமனாகவே இருக்கும்.

உணவுமுறை, உடற்பயிற்சியின் மூலமே இதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். குழந்தைகளைக் கெடுக்கும் உணவுகளான ஐஸ்கிரீம், பேக்கரி உணவுகள், பானிபூரி, குளிர்பானங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை இளம்வயதிலேயே ஏற்படுத்த வேண்டும். மொபைல், வீடியோ கேம்ஸை ஆதரிக்காமல் ஒரு மணி நேரமாவது மற்ற குழந்தைகளுடன் விளையாட அறிவுறுத்த வேண்டும். இது ஒற்றுமையுணர்வையும், சக மனிதர்களுடன் பழகும் மனப்பான்மையையும் கற்றுத் தரவும் உதவும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் பெற்றோர் குழந்தைகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பதும் முக்கியமானது.

இது போன்ற வாழ்வியல் மாற்றங்கள் சரியாக வராதபோது பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத்தான் அறுவை சிகிச்சை செய்வோம்’’ என்றவரிடம், பொதுவாக எப்போது அறுவை சிகிச்சையை தீர்மானிப்பீர்கள் என்று கேட்டோம். ‘‘ஒருவருடைய உயரத்துக்கு இத்தனை கிலோ எடை இருக்க வேண்டும் என்ற பி.எம்.ஐ. அளவுகளின்படிதான் அதிக பருமன் என்பதைமருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இதில் 33 என்ற மருத்துவ அளவு இருக்கிறது. இந்த அளவுக்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை செய்கிறோம்.

சிறிய துளைகள் மூலம் லேப்ராஸ்கோப்பி வழியாகச் செய்கிற அறுவை சிகிச்சை இது. சில நேரங்களில் ஒரே ஒரு சிறிய துளை மூலமாகவும் செய்யலாம். கொழுப்பை அகற்ற அழகு சிகிச்சை நிபுணர்கள் செய்கிற லைப்போசக்‌ஷன் என்பது வேறு வகை சிகிச்சை. அதற்கும் இந்த Bariatric சிகிச்சைக்கும் தொடர்பில்லை. இந்த சிகிச்சையில் Sleeve gastrectomy, இதயத்துக்குச் செய்வதுபோல சிறுகுடலை பைபாஸ் செய்யும் Gastric bypass surgery போன்றவை உண்டு’’ என்கிறார் தீபக் சுப்ரமணியன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.