;
Athirady Tamil News

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படை அதிகாரிகள் குழு விசாரணை முடிந்தது…!!

0

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் அதே நாளில் உயிரிழந் தனர். பலத்த தீ காயம் அடைந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண்சிங் ஊட்டியில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் பெங்களூரில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தது. விமானியின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்புப் பெட்டியை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றியது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட முப்படையின் விசாரணை முடிவடைந்து உள்ளது. மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விபத்துக்கான காரணம் என்ன? விமானி தவறு செய்தாரா? எந்திர கோளாறு ஏற்பட்டதா? வேறு ஏதேனும் காரணமா? என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை வெளியிட்ட பிறகு பிரச்சினைகள் எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே சட்ட ஆலோசனை குழுவின் ஆய்வுக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் ஆய்வு முடிவடைய 10 முதல் 15 நாட்கள் ஆகும். அதன் பிறகே அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் விமானப்படை அதிகாரி மன்மோகன் பகதூர் கூறும்போது, விமானத்தின் முழு கட்டுப்பாட்டில் விமானி இருக்கிறார். ஆனால் தவறான சூழ்நிலை வெளிப்படுவது காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்குகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.