;
Athirady Tamil News

மக்களின் இன்னல்களை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற ரீதியில் தயார்!!

0

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வின்போதே பிரதமர் நேற்று (06) இவ்வாறு குறிப்பிட்டார்.

மகாவலி கங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீரை கடுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து கலகெதர ஊடாக மாவத்தகமவிற்கு கொண்டு செல்லும் இத்திட்டத்தின் மூலம் பல தசாப்தங்களாக சுத்தமான குடிநீரின்றி தவித்து வரும் மாவத்தகம மற்றும் அதனை சூழவுள்ள 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பயனடையும்.

மாவத்தகம முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் கைத்தொழில் வளாகத்திற்கான நாளாந்தத் தேவையான 500 கன மீற்றர் நீர் தேவையும் இதனூடாக பூர்த்திசெய்யப்படும்.

மாவத்தகம நீர் வழங்கல் திட்டத்தின் மொத்த செலவு 3126 மில்லியன் ரூபாவாகும். இது உள்ளூர் வங்கி நிதியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டமாகும்.

குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, இப்பகுதி மக்கள் தண்ணீரின் மதிப்பை நன்கு உணர்ந்துள்ளனர். இதை நான் புதிதாக விளக்க வேண்டியதில்லை. இந்த திட்டத்தை முன்பே முடித்திருந்தால், அது இன்னும் மதிப்புமிக்கதாக இருந்திருக்கும். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று அந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு வழங்க முடிந்துள்ளது. உலகில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், மிகக் குறைந்த அளவே பயன்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம்.

அதிலும் குறிப்பிட்ட அளவை மட்டுமே குடிநீருக்காக பயன்படுத்த முடியும். இவ்வாறு குடிநீர் மட்டுப்படுத்தப்படினும் குடிநீருக்கான ஆதாரங்களை பாதுகாக்க மக்கள் முன்வராதிருப்பது ஒரு பிரச்னையாக உள்ளது.

அன்று ஆறுகள் மற்றும் ஓடைகளில் இருந்து பெற்றுக்கொண்ட சுத்தமான குடிநீரை இன்று அவ்வாறே பயன்படுத்துவதற்கு வழி இல்லை. அவை மனித நடவடிக்கைகளால் மாசுபடுகின்றன. நாம் பாதுகாக்க வேண்டிய இடங்களை நாமே அழித்ததன் விளைவுகளை இன்றைய மக்களும் பிறக்காத தலைமுறையுமே அனுபவிக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நீர் ஆதாரங்களை பாதுகாக்க விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.

குருநாகல் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினை மாவத்தகமவையும் பாதித்தது. இதனைக் கண்டறிந்து மகாவலி கங்கையிலிருந்து நீரை பெற்று கடுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தி கலகெதர ஊடாக மாவத்தகமவிற்கு கொண்டு வர முடிந்தது. மாவத்தகம நகரிலும் பிலஸ்ஸவிலும் உள்ள இரண்டு நீர்தாங்கி கோபுரங்களிலிருந்தும் விநியோகிக்கப்படும் நீர் 28 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இதனூடாக, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தது.

ஆனால் இவ்விடயம் இத்துடன் நிறைவடையாது. அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் இலக்கை நோக்கியே நாம் பயணித்து வருகிறோம். இந்தக் கொள்கை 2025ல் யதார்த்தமாகும்போது, முழு நாட்டிற்கும் குழாய் மூலமான சுத்தமான குடிநீரை வழங்க முடியும்.

இத்திட்டத்துடன் குருநாகல், ரிதீகம, இப்பாகமுவ, கனேவத்த, மெல்சிறிபுர, மாஸ்பொத பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி முன்னோக்கி கொண்டு செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

சுத்தமான குடிநீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல பகுதிகளிலும் மக்கள் சிறுநீரக நோயாளிகளாக மாறியுள்ளனர். குருநாகலில் கணிசமான எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். அந்த சவாலை முறியடிக்கும் வகையில் ´விசல் குருநாகல்´ நீர் வழங்கல் திட்டத்தை அன்று ஆரம்பித்தோம். நாம் ஆரம்பித்த அத்திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை எதிர்நோக்கி அவசர அவசரமாக ஆரம்பிப்பதற்கு முயற்சித்து செய்த தவறை மக்களுக்காக நாமே சரி செய்தோம்.

மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கிளால், தேர்தல் நெருங்குகின்றதா என்று சிலர் கேட்கின்றனர். தேர்தலை எதிர்பார்த்து நாங்கள் இந்த திட்டங்களை முன்னெடுக்கவில்லை. குடிநீரை பெற்றுக்கொடுக்கும் போது இங்குள்ள மக்களின் கட்சி என்ன என்று யாராவது கேட்டதுண்டா? சிலர் இன்று இவை அனைத்தையும் குழப்பிக் கொள்கின்றனர். மக்களுக்கு இக்கட்டான நிலையில் இருக்கும்போது நிவாரணப் பொதி கொடுத்தால் அதன்போதும் இவ்வாறே கேள்வி எழுப்புகின்றனர். நாம் மக்களின் சிரமங்களை புரிந்து கொண்ட அரசாங்கம். பொருட்களின் விலை உயரும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்தான் நிவாரணம் வழங்க முன்மொழிகிறோம்.

ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரும்பவில்லை. அதற்கும் ஏதோ சொல்கிறார்கள். நாம் வழங்குவதையும் விரும்புவதில்லை. பிடிக்காது. அவர்களும் கொடுப்பதில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

சரியாக கொவிட் தொற்றை நாம் கொண்டு வந்ததை போன்றே இவர்கள் பேசுகின்றனர். ஆனால் நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலமே மக்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்பது குறித்து எவரும் பேசுவதில்லை.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அறிந்தவுடன் நாம் அது குறித்து ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொண்டோம். ஆனால் முழு உலகையும் ஆட்கொண்ட கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை எம்மால் ஒரே இரவில் அகற்ற முடியாது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் குறிப்பிடுவதை போன்று ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வலிமையுடன் முன்னோக்கி நகர்கின்றோம். சவால்களுக்கு மத்தியிலேனும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே நாம் எப்போதும் முயற்சிக்கின்றோம். அதன்போது ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு எம்மத்தியில் ஒற்றுமை அவசியம். அவ்வாறு இன்றி தான் இருந்த இடத்திலேயே விமர்சித்துக் கொண்டிருக்கும் போது ஏன் விமர்சிப்பதற்கு முன்னர் செயற்பட முடியாது போனது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் எதிர்காலத்தையும், உங்களது எதிர்காலத்தையும் வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கம். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை வெற்றியடைய செய்யுங்கள். அதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழையுங்கள். இந்த இக்கட்டான காhலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயார் என்பதை நம்பிக்கையுடன் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கடுகஸ்தோட்டையிலிருந்து கொண்டுவரப்படும் நீரை ரிதீகம வதுராபினூ எல்லே குளத்துடன் இணைத்து குருநாகல் நகரம் மற்றும் நகரை சூழவுள்ள அனைத்து பிரதேச மக்களின் தாகம் தீர்க்கப்படும். குருநாகலின் வடக்கே வெல்லவ வரையிலான இந்த நீர்வழங்கல் திட்டம் மக்களுக்கான ஆசீர்வாதமாகும்.

மாவத்தகம மல்லவபிட்டிய நீர் வழங்கல் திட்டம் ஏன் தாமதமாகின்றது என பாராளுமன்றத்தில் என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சியினரே இவ்வாறு கேள்வி எழுப்பினர். நீங்கள் 2015ஆம் ஆண்டிலிருந்து தாமதப்படுத்தியமையினாலேயே தற்போதும் தாமதமாகின்றது என நான் பதிலளித்தேன். இன்று நாம் அதனை மீண்டும் ஆரம்பிக்கிறோம். மாவத்தகம மல்லவபிட்டியவிற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் நீரை விநியோகிப்போம் என நான் அவருக்கு உறுதியளித்தேன். நாம் கூறியதை போன்றே இன்று செயற்படுத்திவிட்டோம்.

இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமரின் பெயர் அழியாத பொன் எழுத்துக்களால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்திக்கு சென்று, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்நாட்டின் தேசியப் பாரம்பரியத்தையும், தேசிய சுதந்திரத்தையும் பாதுகாத்து, இந்த நாட்டின் தேசிய உணர்வுகளை எழுப்ப அவர் எமக்கு வழங்கிய தலைமைத்துவம், இவை அனைத்தினாலும் அவரது பெயர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட பெயராக வரலாற்றில் இடம்பெறும்.

இந்த இரண்டு ஆண்டுகள் இந்நாட்டின் மிகவும் கடினமான காலமாகும். இத்தகைய கடினமான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் இருக்கவில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே இந்த ஆண்டில் புதிய பயணத்தை தொடங்க உள்ளோம். இந்த ஆண்டு இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும், அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியையும், நமது சாதாரண மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பின் அழுத்தங்களையும் தணிக்கவும், அவர்கள் முயலும் வெற்றியை வழங்கவும் முடியும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எமது பிரதமரே, நீங்கள் இந்த திட்டத்தை டிசம்பர் 2014 இல் ஆரம்பித்து வைத்தீர்கள். அதிவேக நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உள்ளூர் வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களே இதற்கான அடிக்கல் நாட்டினார். நாமல் ராஜபக்ஷ அவர்களும் இங்கு வந்து இளைஞர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார். இவ்வாறே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நீர் வழங்கல் திட்டம் எமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நாம் தோற்கடிக்கப்பட்டோம். அதன் பின் இவை அனைத்தும் வழங்கப்பட்டிருந்த போதும் அன்று இருந்த முன்னாள் அமைச்சர் மீண்டும் வந்து இங்குள்ள குழாய் ஒன்றையோ எதனையோ திறந்து வைத்தார். இதிலிருந்த அடுத்த மிகப் பெரிய குற்றச்சாட்டானது, இந்த வீதியில் உள்ள போயகொட பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவில்லை.

இதுபற்றி நான் எமது​ேபிரதமருக்கு தெரிவித்த போது அது குறித்து அமைச்சர் வாசுதேவவிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய உடனடியாக அந்த சாலை அமைப்பிற்கும் நீர் விநியோகம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டது.

நாங்கள் மிகவும் நியாயமான அரசாங்கம். மத, இனப் பிரிவினையை விதைக்கும் அரசாங்கமாக நமது அரசாங்கம் எங்கும் செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையின் பின்னர் சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர், மலாய் என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட அழிவுகளுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை செயற்படுத்தி இந்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவரலாற்றில் இடம்பெறுவார். அவர் ஒரு பாரிய செயலைச் செய்தார்.

நாம் விரும்பாத போதிலும் பெட்ரோல் விலையை எமக்கு உயர்த்த வேண்டியிருந்தது என்பதை மக்கள் அறிவார்கள். விருப்பமின்றி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு முழு உலகிற்கும் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எனினும் ஜனவரி புத்தாண்டின்போது நாம் நிவாரணம் வழங்கினோம். அனைத்து அரச ஊழியர்கள் முதல் அப்பாவி சமுர்த்தி பயனாளர்கள் வரையும் மலையகத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பெருமக்களுக்கும் அந்த நிவாரணம் வழங்கியது மட்டுமன்றி, 50 ரூபாய்க்கு பெறப்பட்ட ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய் நட்டமடைந்தேனும் 75 ரூபாய் வரை அதிகரித்தது போன்ற பல்வேறு விடயங்களை நாம் முன்னெடுத்தோம்.

ஆனால் தற்போது தேர்தலை முன்னிட்டு இவை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிவாரணம் கொடுக்கும் வரை, நிவாரணம் எங்கே என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். நிவாரணம் வழங்கப்பட்டதன் பின்னர் பியகமவில் உள்ள தொழிற்சாலையில் இவை அச்சடிக்கப்பட்டுள்ளதாக சேரு பூசுகின்றனர். வழங்கும் வரையும் திட்டினர். தற்போது வழங்கிய பின்னரும் திட்டுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.