;
Athirady Tamil News

யுகதனவி மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

0

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (10) மூன்றாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுக்களுக்கு ஆதரவாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

குறித்த மூன்று அமைச்சர்களும் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் அண்மையில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார்.

வண.எல்லே குணவன்ச தேரர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை உறுப்பினர்கள், யுகதனவி பவர் பிளாண்ட் வெஸ்ட் கோஸ்ட் பவர் பிரைவேட் லிமிடெட், அமெரிக்க நிறுவனமான New Fortress Energy Company, சட்டமா அதிபர் உள்ளிட்ட குழு பெயரிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.