;
Athirady Tamil News

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல அனுமதி!!

0

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதய கம்மன்பில தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதியான அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் இரண்டு தனிப்பட்ட விஜயங்கள் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ விஜயங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக நீதிமன்றிற்கு அறிவித்தார்.

இதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் ஏப்ரல் 29ஆம் திகதி வரை தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதி கம்மன்பிலவுக்கு குறித்த காலப்பகுதியில் விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கியதுடன் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அமைச்சர் உதய கம்மன்பில அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரையன் ஷட்ரிக் என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.