;
Athirady Tamil News

விவசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது!!

0

இந்நாட்டின் பெரும்பான்மை யார் என்றால் தெற்கிலே சிங்களவர்களையும், வடக்கிலே தமிழர்களையும், கிழக்கிலே முஸ்லிம்களையும் கைகாட்டி விடுவார்கள். ஆனால், அது உண்மையல்ல. இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள்தான். விவாசாய குடும்பங்களை சார்ந்த ஐயாமார்களும் அம்மாமார்களும்தான். இது ஒரு விவசாய நாடு.

சூரிய பகவானை நோக்கி எங்கள் விவசாய விளைச்சலை அதிகரிக்க ஆசி புரி ஆண்டவா என நாம் வேண்டுகிறோம். ஆனால், விளைச்சலை எப்படி அதிகரிப்பது? எங்கே அதற்கு உரம்? உரம் இல்லை. இந்த அரசின் முட்டாள்தனமான கொள்கை காரணமாக உரம் இல்லை. விளைச்சல் அதிகரிப்பது ஒரு புறம் இருக்க, இருப்பதும் குறைந்து விட்டது. ஆகவே விவாசாயிகளின் சாபம் இந்த அரசை சும்மா விடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா, கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி சந்தைக்கு எதிரில் நடைபெற்றது. ஜமமு கட்சி உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர் ரெலோ கட்சி பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருடன் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கட்சி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தை பிறந்தால் வழி பிறகும் என நாம் பாரம்பரியமாக கூறி வருகிறோம். தீர்வு பிறக்கும் எனவும் கூறி வருகிறோம். இந்த வருடம் தை இன்று பிறந்துள்ளது. இந்த தையில் தீர்வு பிறக்கவில்லை. ஆனால், தீர்வுக்கான வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன். அதோ தீர்வு வருகிறது என கை காட்ட கூடிய, குறி சொல்ல கூடிய வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன்.

நாட்டின் நெல் விளைச்சலை, காய்கறி விளைச்சலை, கிழங்கு விளைச்சலை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக உரம் தேவை. இன்று இந்நாட்டில் இந்த அரசின் முட்டாள்தனமான கொள்கை காரணமாக உரம் இல்லை. அதனால் விளைச்சலை அதிகரிக்க சூரிய பகவானை கைகூப்பி வணங்கும், நன்றி தெரிவிக்கும் இந்த நல்ல நாளில், விவசாயிகளின் துன்பத்தை கரிசனையில் எடுக்க வேண்டியுள்ளது.

இது ஒரு விவசாய நாடு. விவசாய மக்கள் மத்தியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பெளத்தர், இந்து, இஸ்லாமியர், கத்தோலிக்கர் இருக்கின்றார்கள். இந்நாட்டின் உணமையான பெரும்பான்மையினர் விவாசாய குடும்பங்களை சார்ந்த ஐயாமார்களும் அம்மாமார்களும்தான். இந்த பெரும்பான்மையினரை இந்த அரசாங்கம் ஆபத்தில் போட்டு விட்டது. ஆகவே விவாசாயிகளின் சாபம் இந்த அரசை சும்மா விடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.