;
Athirady Tamil News

ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் கொண்டு செல்லும் வழியில் பயங்கர வெடிப்பொருட்கள்- போலீசார் விசாரணை…!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா கடந்த 14-ந் தேதி நடந்தது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு பந்தளம் ராஜ குடும்பத்தின் பாரம்பரிய தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இதற்காக திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக சபரிமலை சன்னிதானம் எடுத்து வரப்படும். மகர விளக்கு பூஜை முடிந்த பின்னர் மீண்டும் ஊர்வலமாக பந்தளம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

அதன்படி கடந்த 14-ந் தேதி மகர விளக்கு பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தும் நாளை மறுநாள் 21-ந் தேதி பந்தளம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக சபரிமலையில் இருந்து பந்தளம் செல்லும் பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த வழியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணங்களை மலர்தூவி வழிபடுவார்கள்.

இந்த நிலையில் ஊர்வலம் செல்லும் பாதையில் பேரங்காடு கடவு பாலம் அருகே நேற்று ஒரு மர்ம பார்சல் கிடந்தது. அந்த வழியாக சென்ற பக்தர்கள் இதனை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த மர்ம பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு கிடந்த வெடிபொருட்களை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

ஐயப்பனின் திருவாபரணம் கொண்டு செல்லும் பாதையில் வெடிபொருட்கள் கிடந்தது பற்றி அறிந்ததும் அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சபரிமலை திருவாபரணங்கள் கொண்டு செல்லும் பாதையில் வேண்டுமென்றே வெடிபொருட்கள் போடப்பட்டதா? அவற்றை வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசப்பட்டது? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.