;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு!! (படங்கள்)

0

அங்கஜனின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு

ஜனாதிபதியுடன் அங்கஜன் இராமநாதன் நடாத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு.

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் விடுவிக்கப்படாமலிருந்த 400 மீற்றர் வீதியின் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்தது.

இவ்வீதியை விடுவிப்பது தொடர்பாக கடந்த நல்லாட்சி காலத்தில் பலரால் முயற்சியெடுக்கப்பட்டும் அது கைகூடாத நிலையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும், முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் அவர்களும், இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

மேலும், கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் இவ்வீதி விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தார். அதன்போது ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தை ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் கோரியிருந்தார்.

இதன்பலனாக இவ்வீதியின் கிழக்கு பகுதியில் இருந்த இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் முட்கம்பி வேலி பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளதுடன் வேலிக்குள் உள்ள வீதி விடுவிக்கப்படுவதுடன் அங்கு தற்போது இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினரால் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய பாதுகாப்பு நிலமைகளையும் ஆராய்ந்ததன் அடிப்படையில், குறித்த பகுதியில் 6 மீற்றர் தூரத்துக்கு பாதுகாப்பு வேலியை நகர்த்துவதன் ஊடாக, விடுவிக்கப்படும் 400 மீற்றர் நீளமான நிலப்பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியை போல தற்போது முழுமையாக விடுவிப்பதுக்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் தற்போதைய நிலையில் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது.

அதாவது, கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்கு புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது. இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ்விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலையை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 400 மீற்றர் வீதியானது புனரமைக்கப்பட்டு, விமான நிலையத்துக்கு தற்போது செல்வதற்காக பாவிக்கப்படும் காப்பெற் வீதியுடன் இணைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடைவதற்கான பயணத்தை இலகுபடுத்தும் விதமாகவும், மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் அமைந்திருந்த கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் பகுதியை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும், இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கும், இவ்விடயத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


ஊடகப்பிரிவு
அங்கஜன் இராமநாதன்
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.