;
Athirady Tamil News

13 வது திருத்தச் சட்டம் தமிழர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்ற காரணத்திற்காகவே 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்துள்ளோம்: எஸ்.தவபாலன்!!

0

13 வது திருத்தச் சட்டம் தமிழர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்ற காரணத்திற்காகவே 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்துள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (24.01) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச சபை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேரினவாதிகளின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்த ஆட்சி மாற்றம் தொடர்பில் சமூக ஊடகங்களில் விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்து இருந்ததுடன், அதன் பின்னர் புதிய தவிசாளர் தெரிவின் பின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னனி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. எமது கட்சியின் மூன்று உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பாக வாக்களித்து இருந்தார்கள்.

எமது வாக்களிப்பின் ஊடாக தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்த தவிசாளருக்கும் சம அளவில் வாக்கு கிடைத்தது. திருவுலச் சீட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்த தவிசாளர் தோல்வியுற்றிருந்தார். ஆனால் தற்போது தமிழ் தரப்புக்கள் என கூறி 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் கோரியுள்ளது. நாங்கள் இன்று ஆயிரக்கணக்கான மாவீரர்களை மண்ணுக்காக இழந்துள்ளோம். 13வது திருத்தச் சட்டம் வேணாம் என்று தான் இவ்வளவு தியாகங்களையும் செய்தோம். தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு தீர்வாக 13 வது திருத்தச் சட்டம் இல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னனி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற போது இதை விரும்பாதவர்கள் நாம் தமிழ் மக்களிடம் உண்மையை கொண்டு சென்று சேர்த்து விடுவோம் என்பதற்காக வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பான கட்டுக்கதைகளை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகிறார்கள்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தான் காரணம் என பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகளை நாம் முற்றாக நிராகின்றோம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஒரு கொள்கை மாறாத அரசியல் இயக்கமாக நாம் வளர்ந்திருக்கின்றோம். அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி பெரும்பான்மையினத்தவரிடம் செல்லக் கூடாது என்பதற்காக எமது மூன்று உறுப்பினர்களும் கூட்டமைப்புக்கு வாக்களித்து இருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழக்குமாறு எமது உறுப்பினர்களிடம் கேட்டும் இருந்தார்கள். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கொள்கை சார் முரண்பாடுகள் இருக்கின்ற போதும் நாம் பெரும்பான்மையினத்தவர் வரக் கூடாது என்பதற்காக ஆதரவு வழங்குவோம் எனத் தெரிவித்து அதன்படி செயற்பட்டு இருந்தோம்.

எனவே தவிசாளர் தெரிவு நடைபெற்று ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனால் இப்போது 13 வது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு அதில் அரசியல் தீர்வு இல்லை என சொல்லப் போகின்றோம் என்பதற்காக திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள். இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களின் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை அழிக்க முயல்கிறார்கள். 10 வருடத்திற்கு மேலாக நாம் முன் கொண்டு வந்த நேர்மையான அரசியலை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மாவீரர்களின் ஆணையாக இதனை நாம் முன்னோக்கி கொண்டு செல்வோம்.

13 வது திருத்தச் சட்டம் என்பது என்றைக்கோ அடிக்கப்பட்ட ஒரு சாவு மணி. 1987 ஆம் ஆண்டு பல இயக்கங்கள் உருவாக்கப்பட்டு 13 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அது உப்புச் சப்பில்லாதது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் சம்மந்தன் அவர்கள் நிராகரித்து இருந்தார். அன்று தொட்டுக் கூட பார்க்க மாட்டம் என்றவர்கள் இன்று 13 வது திருத்தச் சட்டத்தை கையில் எடுத்திருப்பதற்கான தேவைப்பாடு என்ன…? முற்று முழுதாக இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்தியாவின் எஜமான் விசுவாத்திற்கதாக இதை செய்கிறார்கள். எனவே இது ஒரு துயர் தோதைந்த வரலாறு.

அதைனையும் தாண்டி பல இயக்கங்களில் இருந்தவர்கள் தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளார்கள். ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சுகிர்தராஜன் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்விலவ் நினைவு பேருரை ஆற்ற வந்த ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம் அவர்கள் அந்த நிகழ்வின் புனிதத்தன்மையை மறந்து முற்று முழுதாக அரசியல் கோமாளித்தனமான கருத்தை அங்கு பதிவு செய்திருந்தார். மிகவும் வேதனையான விடயம்.

அவர்கள் கூட ஆயுதம் சார்ந்த இயக்கமாக இருந்தார்கள். அவர்கள் சார்பிலும் பலர் மண்ணுக்கு விதையாகியுள்ளார்கள். அன்று தமிழ் மக்களது அபிலாசைகளை 13 வது திருத்தச் சட்டம் பூர்த்தி செய்யாது என்று கூறிவிட்டு, இன்று எந்த வகையில் 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என கருதி பேசியுள்ளார். முன்னனி குழப்பவில்லை. 13 வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக எதிர்க்கின்றது.

நாங்கள் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை 13 வது திருத்தச் சட்டம் தமிழர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்ற ஒன்றிற்காக தான் இழந்தோம். ரெலோ என்ற இயக்கம் தான் அரசியல் கட்சியாகவும் செயற்படுகின்றது. வினோதரராதலிங்கம் அவர்களின் பல சகாக்கள் கூட 13 வது திருத்தச் சட்டத்தில் தீர்வு இல்லை என போராடியதால் தான் மண்ணுக்குள் புதைந்துள்ளார்கள். அப்படியானவர்களை மண்ணுக்குள் கொடுத்து விட்டு உன்னதமான உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர் முன்னால் நின்று 13 வது திருத்தம் காலத்தின் தேவை என்று சொல்கிறார். நாட்டுப்பற்றாளர் நடேசன், நாட்டுபற்றாளர் சுகிர்தராஜன், மாமனிதர் தராக்கி சிவராம் போன்றவர்கள் இருந்திருந்தால் 13வது திருத்தச் சட்டத்தை தொட்டு பார்த்திருப்பர்களா அல்லது 13 வது திருத்தச் சட்டம் தேவை என்று சொல்லியிருப்பர்களா?. அவர்களுடைய நிகழ்வில் கூட மனச்சாட்சியை தொட்டு பேச முடியாது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நின்று கொண்டு முன்னனியை விமர்சனம் செய்கிறார்.

டக்ளஸ் தேவானந்த அன்று முதல் ஒற்றையாட்சிக்குள் 13 வது திருத்தச் சட்டம் தான் தீர்வு என்று சொல்கிறார். அப்படி என்றால் அவருடன் சேர்ந்து வேலையைப் பாருங்கள். ஒன்றுபட்டு அழியப்போறமா அல்லது தனித்திருந்து இனத்தை காப்பாற்றப் போறாமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி. தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுக்காத கொள்கையின் பால் தமிழ் தேசிய மக்கள் முன்னனியாகிய நாம் சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்யவுள்ளோம். காலை 9.30 இற்கு நடைபெறும் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் உறவுகள் ஒன்றுபட்டு 13வது திருத்தத்திற்கு எதிராக எமது எதிர்ப்பை வலுப்படுத்துவோம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் தேசிய மக்கள் முன்னனி சேறுபூசல்களை கடந்து மக்கள் ஆதரவுடன் வீறு நடை போடும் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.