;
Athirady Tamil News

அரச நிதியை வீணாக்க இடமளிக்க முடியாது!!!

0

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, சேவை இடம்பெறாமலுள்ள யாழ் புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் சேவைகள் இடம்பெற வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார்.

அரச நிதியை வீணாக்கும் வகையில், புதிய பேருந்து நிலைய இயக்கம் இடம்பெறாமலிருப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என தெரிவித்த அவர், தனியார் மற்றும் இ.போ.ச இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற, வீதி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட, வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளிடம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த நிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன், “முதற்கட்டமாக தமது சேவைகளை பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்ததோடு, தம்மைத்தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையினரும் அங்கு சேவையில் ஈடுபடவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்திய பின்னர் தமது சாதகமான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இபோச வட மாகாண பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குணபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.