;
Athirady Tamil News

என்னை அழிக்க நினைத்தார்கள் – இளைஞர், யுவதிகள் மீட்டெடுத்தனர் !!

0

இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள். காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுகளுக்கு அமைவாக வீதி பெருந்தெருக்கள் அமைச்சு இதற்காக 68 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

2.69 கிலோ மீற்றர் நீளமான கோறளைப்பற்று சுங்கான்கேணி கிராம வீதியானது நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ரஞ்சித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்பு வாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும் போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்த போதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்து வைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றை செய்து வருகின்றோம்.

நான் கல் வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொது நூலகத்திற்கான கட்டுப்மானப்பணிக்கு நான் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகின்றது. இந்த கொரோனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மே மாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று 62 கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.100 கிலோ மீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40 கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்தி சார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விடும்.

அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாததாகவேயுள்ளது. நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான கல்வி துறையை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேநேரம், கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.