;
Athirady Tamil News

சிங்கள – முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!!

0

சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை சரியாக கையாள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (13.03) மாலை இடம்பெற்ற 13 வது திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அன்றாட வாழ்க்கையில் இருக்கின்ற சுமைகளைப் பற்றி யோகின்ற போது வவுனியா மாவட்டத்தின் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தமை ஒரு ஆறுதலையையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு இருக்கக் கூடிய நிலையில் எமது குடும்பங்களுக்கு அடுத்த நேர சாப்பாட்டை போடுவேதே ஒரு சவாலான காலகட்டம். விலை அதிகரிக்கின்ற ஒரு காலகட்டம். அனைத்து விடயங்களிலும் சுமைகள் கையை மீறி தலைக்கு மேல் அமத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாங்கள் இந்த விழிப்புணர்வு பேரெழிச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கடந்த 34 வருடங்களுக்கு மேலாக விசேடமாக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய காலத்தில் அந்த விடுதலைப் போராட்டம் தற்போதை நிலையை விட மோசமான வகையில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. இன்று ஒரு லீற்றர் பெற்றோல் விலை அதிகரித்து விட்டதாக இந்த தீவில் உள்ள சிங்கள மக்கள் கொந்தளிக்கிறார்கள். சாப்பாட்டு விலை கூடி விட்டதாக கொந்தளிக்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் பாவம். அவர்களுக்கு இருக்க கூடிய நிலையில் அது மிகப்பெரிய சுமை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உரிமைக்காக போராடிய ஒரே ஒரு காரணத்திற்காக எங்களது தாயக நிலப்பரப்பில் பொருளாதார தடைகளை விதித்து தசாப்பதங்களாக எங்களது மக்களது வாழ்க்கையை நசித்தார்கள். இன்று தெற்கில் கொந்தளிக்கும் மக்கள் 20 வருடங்களுக்கு முதல் அதாவது 2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோல் 1500, 2000 ரூபாய் ஆக இருந்த ஒரு காலத்தில் இருந்து தான் எங்களுடைய மக்கள் இந்த சுமைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் மீது செலுத்திய கொடுமைகள் நூற்றில் ஒரு பங்காவது இன்று சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளமை அவர்களது கண்களை திறக்க வைத்துள்ள ஒரு காலகட்டம். தங்களது தலைவர்கள் தங்களை ஏமாற்றி விட்டார்கள் என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். தங்களது தலைவர்கள் தொடர்ச்சியாக பொய் சொல்லி வந்துள்ளார்கள் என்றும், எவரையுமே நம்ப முடியாது என்றும் சொல்லுகின்ற ஒரு காலகட்டத்திற்கு வந்துள்ளார்கள். இந்த நிலை தொடருமாக இருந்தால் அந்த மக்கள் முழுமையாக வீதிக்கு இறங்குகின்ற ஒரு நிலை விரைவிலே வரும். தங்களுடைய தலைவர்களைப் பார்த்து அவர்களை நம்ப முடியாது என்று கூறுகின்ற இந்த கால கட்டம் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் சர்வதேசமும் கடந்த 74 வருடங்களாக தமிழ் மக்களைப் புறக்கணித்து, தமிழ் மக்களது உரிமைகளை முற்று முழுதாக உதாசீனம் செய்து இருக்கின்ற சிறிலங்கா அரசுக்கும் ,சர்வதேச ரீதியாக கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட குறைபாடுகள் இருந்தாலும் கூட சர்வதேச சமூகம் கூறும் விடயத்தை பார்க்க வேண்டும். இங்கு நல்லிணக்கம் ஏற்படுமாக இருந்தால் இத்தீவில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளார்கள். இங்கு பயங்கரவாத யுத்தம் நடந்ததாக அரசாங்கம் கூறும் நிலையில் தமிழ் மக்களும், ஏனைய சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

தாம் வாக்களித்த தமது தலைவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று தமது சொந்த தலைவர்களையே சிங்கள மக்கள் பார்க்கின்ற போது தமிழ் மக்கனைளப் பற்றி இவர்கள் கடந்த 70 வருடங்களாக சொல்லியிருக்கின்ற விடயங்கள் கூட அப்பட்டமான பொய்கள் என்று கேள்வி எழுப்ப கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது என யோசிக்கின்ற இந்த நிலையும் உருவாகியுள்ளள போது 34 வருடங்களுக்கு முதலே நிராகரித்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதா அல்லது நிரந்தரமாக தமிழ் மக்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வை வலியுறுத்துவதா? இது பற்றி எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் பொறுப்புடன் கூறுகின்றோம். கடந்த காலங்களில் எங்களுக்கு ஒரு தலைமை இருந்தது. அவர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தார்கள். அப்டியெனில் நீங்கள் யோசிக்க வேண்டும். அவர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்வதற்கும் தயார் என்றால் ஒரு பொய்க்காக அவர்கள் உயிரை தியாகம் செய்யவில்லை. அப்படிப்பட்டவர்கள் பின் கண்ணை மூடிக் கொண்டு போகலாம். ஆனால் இன்றைக்கு அப்படியான நிலை இல்லை. ஆனால் இன்று மக்கள் தங்களது உரிமைகளை அடைவதாக இருந்தால் முதல் விடயமாக தங்களை ஏமாற்றுபவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அப்படியாயின் நீங்கள் முதல் கட்டமாக விழிப்புணர்வு அடைய வேண்டும். இந்த அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் யாரும் வந்து கூறுகின்ற சொற்களை கேட்டு அதற்கு பின்னால் செல்லும் காலம் முடிந்து விட்டது. அதனால் தான் நாங்கள் கிராமம் கிராமமாக சென்று சமகால அரசியலை உங்களுக்கு விளங்கப்படுத்தி வருகின்றோம்.

சிங்கள மக்களே தங்களது தலைவர்கள் தங்களை ஏமாற்றியுள்ளார்கள். தங்களது சுயநலத்திற்காக தங்களது பொருளாதாரத்திற்காகவும், தங்களது குடுபங்களை கருதியும் செயற்படுகிறார்கள். ஊழல் உச்சத்திற்கு போயுள்ளது என முதல் தடைவையாக தெற்கில் வாழும் சிங்கள மக்கள் அனைத்து தங்களது தலைவர்களையும் சந்தேகிக்கும் நிலை உருவாகியுள்ளது.

முஸ்லிம் மக்கள் சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருந்தும் கூட குறிப்பாக தமிழர்களது உரிமைப் போராட்ட காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் சிங்கள தலைவர்களுடன் இருந்தார்கள். அவர்கள் எங்களுடன் சேர்ந்து போராட வில்லை என்கின்ற குறை இருக்கின்றது. அப்படிப்பட்ட முஸ்லிம் மக்களையும் தங்களது எதிரிகளாக பார்த்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரைக்கும் சிறிலங்கா அரசையும், தேசத்தையும் நம்பி அடிவாங்கும் கட்டத்தில் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். தற்போது அவர்களும் கேள்வி எழுப்பும் ஒரு நிலை காணப்படுகின்றது. தமிழர்கள் போராட்டம் நியாயமானது என்ற சிந்தனை முஸ்லிம் மக்கள் மத்தியில் விசேடமாக இளைஞர்கள் மத்தியில் வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்கள், சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், உலகத்திற்கும் உண்மைகளை செல்ல வேண்டியுள்ளது. எங்களது பாதிப்பை உறுதிப்படுத்த என்ன தேவை. அதனை நாட்டை பிரிக்காமல் அடையலாம் என்றால் அற்கான அந்த உத்தரவாதத்தைக் கொடுத்து எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதற்கு முயற்சி எடுக்கும் காலம் இது. தங்களது தலைவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் தமிழ் மக்கள் பற்றி எவ்வளவு பொய் சொல்லியிருப்பார்கள் என்று சிங்கள மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள். அதனால் நாம் இன்று சிங்கள மக்களுக்கு இதனை தெரியப்படுத்தி எமக்கான தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டியிருப்பதுடன், பொருளாதாரம் சீரழிந்துள்ள நிலையில் புலம்பெயர் உறவுகளுடன் சேர்ந்து எமது பிரச்சனை தீர்க்கப்படும் போது உங்களது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என நாம் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இன்று இலங்கையை மையமாக கொண்டு பேரம் பேசும் முறை உருவாகியுள்ளது. சீனா, இந்தியா பூகோளப் போட்டியில் தம்ழ் தலைவர்கள் இந்தியாவின் நலன் சார்ந்து அரசியலை முடக்க முயல்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தில் இந்தப் பேரணி உங்களை ஏமாற்ற விரும்புவர்களுக்கு கண்களை திறக்க வைக்கின்ற ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வு வவுனியாவில் கூட வெறுமனே ஒரு ஆரம்பம். நாங்கள் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பேரில் எமது அரசியலை முடக்குவதற்கான சதி நடக்கின்றது என்பதை சிந்திக்க வைத்துள்ளோம். இனி ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லப் போகின்றோம். இந்தக் பணி யாழ்ப்பாணத்தில் முதல் கட்டமாக நடந்தது. அந்த கிட்டு பூங்கா பிரகடனத்தின் அடிப்படையில் வவுனியாவில் நடத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக தென் தமிழ் தேசத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்த இருக்கின்றோம். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று எங்களது மக்களுக்கு உண்மைகளைக் கூறுகின்ற பணி தொடரும்.

சிறிலங்கா அரசாங்கம் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பை கொண்டு வரும் போது அதனை ஆதரிப்பதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் 5 பேர் அரச ஆதரவுடன் இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் விரும்புவதை செய்கிறார்கள். அது போல் மிகுதி 13 பேரில் சமஸ்டியை கோரி ஒற்றையாட்சியை நிராகரித்தே வாக்கு கேட்டார்கள். அந்த 13 பேரும் தேர்தல் காலத்தில் 13 என்ற வார்த்தையே பேசமால் ஒற்றையாட்சியை நிராகரித்தே வாக்கு கேட்டார்கள். அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இரண்டு உறுப்பினர்கள் தவிர, ஏனைய 11 பேரும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை காரணம் காட்டி ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள். அவர்களது தலைவர்கள் தான் இந்தியாவிற்கு கடந்த ஜனவரி மாதம் 13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரி கடிதம் எழுதி ஒற்றையாட்சிக்கு விசுவாசம் காட்டியுள்ளார்கள். ஆகவே 11 பேரும் தாங்கள் நடைமுறைப்படுத்தக் கோரிய 13 ஆவது திருத்தம் இந்தியாவின் அழுத்ததால் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக காட்டி ஆதரவு வழங்கவுள்ளார்கள்.

ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பை ஆதரிப்பதை முறியடிப்பதற்காக தான் நாங்கள் வீடு வீடாகச் சென்று எமது மக்களை விழிப்புணர்வூட்டி வருகின்றோம். அந்தவகையில் வவுனியாவில் நடைபெற்ற இந்தப் பேரணி என்னைப் பொறுத்தவரை மிகப் பெரும் வெற்றி. இந்தப் பேரணி எம்மை ஏமாற்றுபவர்களுக்கு ஒரு சவாலை விடுகின்ற ஒரு நிகழ்வு. பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சிக்கு ஆதரவு கொடுத்தால் வவுனியாவிற்கு நீங்கள் திரும்ப முடியாது என்ற ஒரு செய்தியை கூறும் மாபெரும் நிகழ்வாக இந்தப் பேரணி அமைந்துள்ளது.

இலட்சக் கணக்கில் மக்கள் தமது உயிர்களை தியாகம் செய்தமை தங்களது உரிமைகளை அடைவதற்கும், தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் சுயநிர்ணயத்தை அனுபவிப்பதற்குமே. செய்த தியாகங்களை மதித்து தனிப்பட்ட ஒரு விடயமாக கருத்தி போராடுவதற்கு எம்மோடு சேர்ந்து நீங்கள் வந்திருப்பது மிகப்பெரும் நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தப் புரட்சி தொடர வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒவ்வொரு தமிழனின் காதிலும் விழ வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக ஒரு தேசமாக நின்று எமது உரிமைகளைப் பெற உறுதி பூணுவோம் எனத் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.