;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 25-வது நாள்: உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும்- ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்…!!

0

5.50: உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு போலந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் லிஞ்ச் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, கிழக்கு போலந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியுள்ள மையங்களுக்கு சென்று பார்வையிட்டனர். உக்ரேனில் இருந்து வரும்அகதிகளை ஏற்றுக் கொள்வதில் போலந்து நாட்டின் வெளிப்படையான தன்மைக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

03.10: அப்பாவி மக்கள் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களுக்கு எதிராக சீனா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நாகரீகமான நாடுகளின் கூட்டணியை ஆதரித்து ரஷியாவை கண்டித்தால், உலகளாவிய பாதுகாப்பு அமைப்பின் முக்கிய அங்கமாக சீனா திகழும் என்று உக்ரைன் அதிபரின் உதவியாளர் மிகைலோ பொடோலியாக் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

12.50: உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

12.05: அர்த்தமுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷியா உறுதியளிக்க வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் போரினால் ஏற்படும் விளைவுகளை ரஷியா பல தலைமுறைகளாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19-03-2022

22.05: ரஷியாவின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை சீனா கண்டிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. ரஷியாவுக்கு சீனா ஆதரவு அளித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், உக்ரைன் தனது கருத்தை கூறி உள்ளது.

20.20: ரஷியா படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறி உள்ளது.

19.25: ரஷியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கான தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்கு போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறி உள்ளது.

17.45: தெற்கு உக்ரைனில் ராணுவ முகாம்கள் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

17.40: மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

16.30: உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர் ‘பேரழிவு தரும் பைத்தியக்காரத்தனத்தால்’ வழிநடத்தப்படுகிறது என்றும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சுவிட்சர்லாந்து விலை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து அதிபர் இக்னேசியோ காசிஸ் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.