;
Athirady Tamil News

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு…!!

0

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் பரவியது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்புக்குழு ஈடுபட்டது.

விபத்து ஏற்பட்டு 36 மணி நேரத்திற்கும் மேல் கடந்த நிலையில், விமான விபத்தில் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. விமானத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கருப்புப் பெட்டி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீனா விமானப் போக்குவரத்து அதிகாரித்தின் செய்தித் தொடர்பாளர் லியு லுசாங் கூறுகையில், “சீனா ஈஸ்டர்ன் எம்யு5735 ரக விமானத்தில் இருந்து ஒரு விமான ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால், இந்த விமானத்தில் இரண்டு வகை ரெக்கார்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது என்றும், அதில் ஒன்று பின்பக்க பயணிகள் கேபினில் விமானத் தரவைக் கண்காணிக்கும் ரெக்கார்டர் மற்றொன்று காக்பிட் ஒலி ரெக்கார்டர் என்றும் கூறப்படுகிறது.

அதனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருப்பு பெட்டி கடுமையாக சேதமடைந்துள்ளதால் அது டேட்டா ரெக்கார்டரா அல்லது காக்பிட் ஒலி ரெக்கார்டரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன் இன்னும் முக்கிய ஆதாரங்களை சேகரிப்பது அவசியம் என்று சீனா விமானத்துறை நிர்வாக அதிகாரி மாவோ யான்ஃபெங் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.