;
Athirady Tamil News

மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும். அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல…!!

0

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

நேற்று (23) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் வண. அத்துரலியே ரத்தின தேரர், 11 பங்காளிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது. கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.

சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றதுடன், அதனை தேசிய தேவையாகக் கருதி பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். கலந்து கொள்ளாத ஏனைய கட்சிகளுக்கும் வருகை தந்து, தமது நிலைப்பாட்டை சர்வகட்சி மாநாட்டின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.