;
Athirady Tamil News

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்த வங்கியில் சராசரியாக இருக்க வேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இரத்த வங்கியில் 167 பைந்த் குருதி மட்டுமே இருக்கின்றது. இது இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும். சராசரியாக நாளொன்றிற்கு 35 – 40 பைந்த் குருதி நோயாளர்களுக்கு இரத்த வங்கியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றது.

திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதனால் எதிர்பார்க்காத வகையில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடைபெற்ற இரத்ததான முகாம்களிலும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காரணமாக குறைந்தளவு குருதிக்கொடையாளர்கள் மட்டுமே இரத்ததானம் செய்கின்றார்கள். ஆகவே இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்களும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்களும் இந்த ஆபத்தான நிலையை தவிர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்தவங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரத்ததானம் செய்வதற்கான அடிப்படை தகுதிகளாக , 18 – 55 வயது வரை ஏற்கனவே இரத்ததானம் செய்திருந்தால் அவர்கள் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம், குறைந்தது 50 கிலோ நிறையை கொண்டிருத்தல், ஈமோகுளோபினின் அளவு 12.5 g ஆக இருத்தல்,ஏற்கனவே இரத்ததானம் செய்திருந்தால் 4 மாதங்கள் பூர்த்தியாக வேண்டும்,கொரோனா தடுப்பூசி ஏற்றியிருந்தால் 7 நாட்களின் பின்னர் இரத்ததானம் செய்யலாம் என்பன குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களோ அல்லது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவார்களோ 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு
தொடர்பு கொண்டு உயிர் காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.