;
Athirady Tamil News

குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)

0

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இருமல் கஷாயம் சிறு துண்டு சுக்கு, அதிமதுரம் 2 குச்சிகள், சித்தரத்தை 2 துண்டு, உடைத்த மிளகு 8, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் 2, வால்மிளகு ½ ஸ்பூன். இவற்றை உரலிலோ, மிக்சியிலோ பொடித்து 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும் வடிகட்டி பனங்கற்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால் இருமல் குணமாகும்.

வயிறு மந்தம் கஷாயம்

மழை, குளிர்காலங்களில் வயிறு மந்தமாகும். ஜீரணமாவதற்கு சிரமமாகும். இதற்கு கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன் மிக்சியில் பொடித்து இத்துடன் ½ ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விடவும். பாதியாக வற்றியபின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து சூடாக குடித்தால் நிவாரணம் தரும். வயிறும் சுத்தமாகும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும்.

எதிர்ப்புச் சக்தி கஷாயம்

பனங்கற்கண்டு 1 டம்ளர், மிளகு 2 டேபிள் ஸ்பூன், சுக்குப் பொடி- 1 டேபிள் ஸ்பூன், அரிசித் திப்பிலி 10, ஏலம் 6, கிராம்பு 10, ஜாதிக்காய் ¼ துண்டு. இவை அனைத்தையும் (பனங்கற்கண்டு தவிர) மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும். 2 டம்ளர் தண்ணீரில் பனங்கற்கண்டை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் சூடு செய்து பொடியை போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும். ஆறியபின் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். குடிக்கும்போது வெது வெதுப்பான நீரில் ¼ டம்ளர் பானகம் விட்டு குடிக்கலாம். நோய்களை சமாளிக்கும் நிவாரண கஷாயம் இது.

தொண்டை பிரச்னைக்கான கஷாயம்

துளசி 1 கைப்பிடி, ஓமவல்லி இலைகள் 6, மாவிலை 2, தூதுவளைக்கீரை 6, மணத்தக்காளி இலை ஒரு கைப்பிடி. இவைகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கவும். மிளகு, சீரகம் 1 ஸ்பூன் வறுத்து பொடிக்கவும். அனைத்தையும் நீரில் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தபின் 1 டம்ளர் கஷாயத்திற்கு தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து மெல்ல அருந்தினால் தொண்டைகட்டு, கமறல், தொண்டை வலி குணமாகும். குளிர்காலத்திற்கேற்ற கஷாயம் இது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.