;
Athirady Tamil News

பிரசாந்த் கிஷோர் திட்டங்களை ஆய்வு செய்ய 3 பேர் குழு- சோனியா காந்தி நியமித்தார்..!!

0

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் காங்கிரஸ் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அவர் புதிய வியூகங்களுடன் சோனியாவை அணுகி உள்ளார்.

சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு குற்றங்களை விவரித்தார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

மேலும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவரத் தயார் என்றும் கூறினார். ஆனால் அவரை காங்கிரசில் சேர்க்க அதிருப்தி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் கிஷோர் சில காங்கிரஸ் மூத்த தலைவர்களை கடுமையாக குறை கூறியதாக தெரிகிறது. இதனால் கணிசமான மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதா? வேண்டாமா? என்று சோனியா காந்தி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வகுத்துள்ள புதிய வியூகங்கள் கைகொடுக்குமா என்ற சந்தேகமும் சோனியாவுக்கு எழுந்துள்ளது. இதையடுத்து அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜூன கார்க்கே, அம்பிகா சோனி ஆகிய 3 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உள்ளார்.

இந்த 3 பேர் குழு பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். இந்த திட்டங்கள் காங்கிரசுக்கு உண்மையிலேயே பயன் உள்ளதாக இருக்குமா என்று ஆலோசிப்பார்கள்.

அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் அதை அறிக்கையாக தயாரித்து சோனியா காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன் பிறகு பிரசாந்த் கிஷோர் விவகாரத்தில் சோனியா முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் 543 எம்.பி. தொகுதிகளில் 370 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு உள் கட்டமைப்பு வசதிகள் அதிகம் இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கண்டறிந்து உள்ளார். எனவே இந்த 370 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த அவர் சில வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். இந்த வியூகம் கைகொடுக்குமா? என்று 3 பேர் குழு மூலம் சோனியா ஆய்வுகளை தொடங்கி உளளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.