;
Athirady Tamil News

இடைக்காடு கிராமம் பற்றிய வரலாற்று நூல் வெளியீடு!! (படங்கள்)

0

இடைக்காடர் ஈஸ்வரன் எழுதிய இடைக்காடு எம் தாயகம் – வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வெளியீட்டு விழா 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடைக்காடு மகா வித்தியாலய மண்டபத்தில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்றது

இடைக்காடு இணையத்தினால் வெளியிடப்பட்ட இந்நூலுக்கான வெளியீட்டுரையை ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் செ.விஸ்வலிங்கமும் நயப்புரையை செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் நிகழ்த்தினர்.

நூலை ஓய்வுநிலை கல்வியியல் பேராசிரியர் க. சின்னத்தம்பி வெளியிட்டு வைக்க இலங்கை வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் க. இலட்சுமண சர்மா பெற்றுக்கொண்டார்.

வண்ணப் புகைப்படங்கள் பலவற்றுடன் நூறு பக்கங்கள் கொண்ட இந்நூல் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் உள்ள வாவெட்டி மலை என்ற இடத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களே வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் குடியேறி இடைக்காடு என்ற ஊரை ஆக்கியதாக இந்நூல் குறிப்பிடுகிறது.

ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் புதூர் நாகதம்பிரான் ஆலயம் முதலியன இடைக்காட்டைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் ஆகும்.

வண்ணை வைத்தீஸ்வரக் கல்லூரி இடைக்காட்டைச் சேர்ந்த நாகமுத்து இடைக்காடரால் நிறுவப்பட்டது. இவரே இலங்கையில் நீலகண்டன் என்ற நாவலை எழுதிய முன்னோடியும் ஆவார். முன்னாள் அரச அதிபர் மாணிக்க இடைக்காடர் தனது கிராமத்துக்காகப் பல சேவைகளை செய்து அதை உயர்த்தி வைத்தவர் ஆவார். இவ்வாறாக இடைக்காடு மக்களின் பெருமைகளை ஆவணப்படுத்துவதாக இந்நூல் வெளிவந்துள்ளது

நிகழ்வில் இடைக்காட்டுடன் தொடர்புடைய உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் வன்னியில் வாழ்பவர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.